டாக்கா: வங்கதேச நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அந்த நாட்டில் புதிய இடைக்கால அரசு அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க மாணவர் சங்கங்களுக்கு ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து பல்வேறு மாணவர் சங்கங்கள் கடந்த ஜூனில் போராட்டம் தொடங்கினர். இது நாடுமுழுவதும் பெரும் கலவரமாக மாறியது.கடந்த 2 மாதங்களில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த சூழலில் தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் குவிந்தனர். நாடாளுமன்றம், பிரதமர் இல்லம் உள்ளிட்ட இடங்களை அவர்கள் முற்றுகையிட்டனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு விமானம் மூலம் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அந்த நாட்டில் தற்போது ராணுவம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த சூழலில், வங்கதேசத்தில் சில இடங்களில் மாணவர்களின் போராட்டம் சற்று குறைந்துள்ளது. பல நாட்கள் அமலில் இருந்த ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. எனினும், கலவரம்இன்னும் முழுமையாக ஓயவில்லை.
» “ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் உடைந்து போனது” - வினேஷ் போகத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து
» ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா போராடி தோல்வி; இறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி!
ஓட்டலுக்கு தீ: 24 பேர் உயிரிழப்பு: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஜேசோர் பகுதியில் அவாமி லீக்தலைவர்கள், தொண்டர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் தீ வைத்தனர். இதில் 24 பேர் உயிரிழந்தனர். டாக்காவில் அவாமி லீக்கை சேர்ந்த 2 எம்.பி.க்களின் வீடுகளுக்கு நேற்று தீ வைக்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இந்துகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன.
மாணவர் போராட்டத்தின்போது காவல் துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். இதன்காரணமாக வங்கதேசம் முழுவதும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
450 காவல் நிலையங்கள் சூறை: நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு உள்ளன. ஏராளமான காவலர்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு அரசு அலுவலகங்கள் மீதும் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்திருப்பதால் காவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். வங்கதேச காவல் துறை தலைவர் சவுத்ரி அப்துல்லா குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
ஷேர்பூர் நகரில் உள்ள சிறை மீதுவன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. அப்போது சிறையில் இருந்த 500 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
வங்கதேச தொலைதொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்த ஜூனைத் அகமது பாலக், இந்தியா செல்வதற்காக நேற்று டாக்காவில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றார். அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பல அமைச்சர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் சகாபுதீன் நேற்று பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும், பின்னர் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.
வங்கதேச உளவுத் துறை தலைவர் ஜி அல் ஹசன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவான தளபதிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேச வெளியுறவு துறை பொறுப்பை லெப்டினென்ட் ஜெனரல் முகமது ஏற்றுள்ளார். பல்வேறு முக்கிய இலாகாக்கள் ராணுவ தளபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. டாக்கா சர்வதேச விமான நிலையம் உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் துணை ராணுவ படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன.
முன்னாள் பிரதமர் கலிதா விடுதலை: பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா, ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். உடல்நலக் குறைவு காரணமாக தற்போது அவர் வங்கதேசத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராணுவ ஆட்சி பதவியேற்ற உடனே கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டார்.
அவாமி லீக் கட்சி தவிர்த்து இதரகட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய புதிய இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் அறிவித்துள்ளார். புதிய இடைக்கால அரசை அமைப்பது குறித்து ஆலோசிக்க மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பதவி ஏற்குமாறு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுபெற்ற முகமது யூனுஸுக்கு மாணவர் சங்கங்களின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கிடையே, இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக மாணவர் சங்கங்களை சேர்ந்த 13 பிரதிநிதிகள் நேற்று இரவு அதிபர் முகமது சகாபுதீனை சந்தித்து பேசினர்.
ஷேக் ஹசீனா லண்டன் செல்வதில் தாமதம் ஏன்? - வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா, இந்தியாவில் தற்காலிகமாகவே தங்கியுள்ளார். அவர் பிரிட்டிஷ் தலைநகர் லண்டன் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹசீனாவின் மூத்த மகன் ஷாஜிப் வாஸத் ஜாய், அமெரிக்காவில் வசிக்கிறார். மகள் சைமா வாஸத், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநராக பதவி வகிக்கிறார். தற்போது அவர் டெல்லியில் தங்கியிருக்கிறார். ஹசீனாவின் தங்கை ரெகனா பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர். பிரிட்டனில் தற்போது தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. ரெகனாவின் மகள் துலிப் சித்திக், தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாக உள்ளார். அவர் மூலமாக பிரிட்டனில் ஹசீனா தஞ்சமடைய ஏற்பாடு நடக்கிறது. பல்வேறு காரணங்களால் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் அரசு அனுமதி மறுத்தால் அவர் வேறு நாட்டுக்கு செல்வார்.
டெல்லி வீட்டுக்கு உச்சகட்ட பாதுகாப்பு: தற்போது டெல்லியில் உள்ள ரகசிய வீட்டில் ஹசீனா தங்கி உள்ளார். அவரது வீட்டுக்கு இந்திய விமானப் படையின் ‘கருடா’ பிரிவு, உச்சகட்ட பாதுகாப்பு அளித்து வருகிறது. இதற்கிடையே, அவரது அமெரிக்க விசா ரத்து செய்யப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago