வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்: இந்து கோயில்கள் மீது தாக்குதல்

By செய்திப்பிரிவு

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்திய கலாச்சார மையம் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 4 இந்து கோவில்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் தலைவர் கஜோல் தேவ்நாத், டாக்காவின் தன்மோந்தி பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி கலாச்சார மையம் வன்முறை கும்பலால் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் 4 இந்து கோயில்கள் சிறிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தவிர டாக்காவில் உள்ள பங்கபந்து நினைவு அருங்காட்சியகம் உட்பட பல்வேறு முக்கிய கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. பங்கபந்து அருங்காட்சியகம், 1975ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வங்கதேச அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் (ஷேக் ஹசீனாவின் தந்தை) நினைவாக கட்டப்பட்டது. சேதமடைந்த இந்திய கலாச்சார மையத்தில் 21 ஆயிரம் புத்தகங்கள், பல்வேறு வரலாற்று ஆவணங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து இன்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் பிரதமர் மாளிகையான கனபாபனில் இருந்து புறப்பட்டார். அவர்கள் புறப்பட்ட விமானம் புதுடெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அவர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், இங்கிலாந்து அரசிடம் ஷேக் ஹசீனா தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பின்னணி என்ன? - கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர் போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, போலீஸை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் வங்கதேச போராட்டம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது. ஜூலையில் இருந்து இதுவரையிலான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ கடந்ததும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE