ஷேக் ஹசீனா ராஜினாமா, இடைக்கால அரசு அமைக்கும் ராணுவம் - வங்கதேசத்தில் அடுத்து..?

By செய்திப்பிரிவு

டாக்கா: மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, வங்கதேச பிரதமர் ஹேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுச் சென்ற நிலையில், ‘இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும்’ என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இச்சூழலில், புகழ்பெற்ற எழுத்தாளரும், பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமையும் என்று வங்கதேச தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் தீவிரமடைந்த மாணவர் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இன்று (திங்கள்கிழமை) ராஜினாமா செய்தார். இதையடுத்து, பகல் 2.30 மணி அளவில் அவர் தனது சகோதரி ஷேக் ரேஹானாவுடன் வங்கதேசத்தின் கனபாபன் என்ற இடத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகள் வெளியாகி உள்ளன. எனினும், அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்தியாவின் திரிபுராவில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, வங்கதேசத்தை ஒட்டிய 4,096 கிலோ மீட்டர் தூரம் உள்ள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் தல்ஜித் சிங் சவுத்ரி கொல்கத்தா விரைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஹேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், “இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என தெரிவித்தார்.

இதனையடுத்து, வங்கதேச தேசிய கட்சி, ஜதியா கட்சி, ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் ராணுவத் தளபதி ஆலோசனை மேற்கொண்டதாகவும், அதன் அடிப்படையில் இடைக்கால அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையில் பங்கேற்ற வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி, புகழ்பெற்ற எழுத்தாளரும் பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமையும் என தெரிவித்துள்ளது.

மேலும், இடைக்கால அரசில் டாக்டர் ஆசிப் நஸ்ருல், ஓய்வுபெற்ற நீதிபதி மொகமது அப்துல் வாஹாப் மியா, ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் இக்பால் கரிம் புயியான், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சையத் இஃப்திகார் உத்தின், டாக்டர் தேபபிரியா பட்டாச்சார்யா, மடியூர் ரஹ்மான் சவுத்ரி, ஓய்வுபெற்ற ராணுவ பிரிகேடியர் ஜெனரல் சகாவத் ஹொசைன், டாக்டர் ஹொசைன் ஜில்லூர் ரஹ்மான், ஓய்வுபெற்ற நீதிபதி மாட்டின் ஆகியோர் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஹேக் ஹசீனாவின் மாளிகைக்குள் தடியுடன் நுழைந்த போராட்டக்காரர்கள்: நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலைநகரில் திரண்டுள்ள போராட்டக்காரர்கள், ஹேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும், வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுசாமன் கான் கமலின் டாக்கா இல்லத்தின் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தன்மாண்டி பகுதியில் உள்ள அவாமி லீக் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர்.

பின்னணி என்ன? - கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர் போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, போலீஸை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் வங்கதேச போராட்டம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஜூலையில் இருந்து இதுவரையிலான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ கடந்ததும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE