ரஷ்யா திரும்பிய உளவாளி தம்பதியை வரவேற்ற புதின்

By செய்திப்பிரிவு

மாஸ்கோ: அமெரிக்கா, ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. இதன் ஒரு பகுதியாக. ரஷ்ய கொலையாளியான வாதிம் கிரசிகோவை விடுவிக்க ஜெர்மனி ஒப்புக்கொண்டது. கிரசிகோவ் உட்பட 8 கைதிகள் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கு பதிலாக ரஷ்ய சிறைகளில் அடக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் பால் வேலன், வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தியாளர் இவான் கெர்ஷ் கோவிக் உட்பட 16 வெளிநாட்டினர் அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ரஷ்யா வின் ஆர்டெம் டல்ட்சேவ் மற்றும் அவருடைய மனைவி அன்னா டல்ட்சேவ் தம்பதி தங்களுடைய 2 குழந்தைகளுடன் அமெரிக்காவிலிருந்து மாஸ்கோ சென்றடைந்தனர். விமான நிலையம் சென்றடைந்த அவர்களை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அன்னா டல்ட்சேவ் கண்ணீர் மல்க புதினை ஆரத் தழுவினார். அப்போது, அந்த குழந்தைகளுக்கு ரஷ்ய மொழி தெரியாது என்பதால் ஸ்பானிஷ் மொழியில் புதின் அவர்களுடன் பேசினார். ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு புதின் யார் தெரியவில்லை. மேலும், அந்த குழந்தைகளுக்கு தாங்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்பது மாஸ்கோ சென்ற பிறகுதான் தெரியவந்துள்ளது. இந்த தகவலை அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

டல்ட்சேவ் தம்பதி. அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி ஸ்லோவேனியாவில் தங்கி ரஷ்யாவுக்காக உளவு பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE