ஈரான் - இஸ்ரேல் பதற்றம்: லெபனானில் இருந்து வெளியேற குடிமக்களுக்கு யுஎஸ், பிரிட்டன் அறிவுரை

By செய்திப்பிரிவு

பெய்ரூட்: மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக லெபனானில் இருந்து வெளியேற தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவுரை வழங்கியுள்ளன.

சில விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை லெபனானில் நிறுத்திக் கொண்டுள்ளன. ஆனாலும் முழுவதுமாக விமான சேவை இன்னும் நிறுத்தப்படவில்லை. அதனால் அங்குள்ள நம் குடிமக்கள் கிடைக்கின்ற விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து, அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் தூதரகங்கள் அறிவுரை வழங்கியுள்ளன.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதல் தீவிரமடையும் சூழல் இருக்கின்ற நேரத்தில் இதனை அந்த இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. ‘மக்கள் கிடைக்கின்ற விமான டிக்கெட்டுகளை பதிவு செய்து லெபனானில் இருந்து வெளியேற வேண்டும்’ என பெய்ரூட்டில் இயங்கி வரும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

“பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலை இன்னும் மோசமாகலாம். அங்கிருந்து பிரிட்டன் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பது எனது மெசேஜ். நாட்டு மக்களுக்காக அங்குள்ள நமது தூதரகம் மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது” என பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லேமி தெரிவித்துள்ளார். இதே போல பல்வேறு நாடுகளில் லெபனானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் மோதல் நீடித்து வருகிறது. கடந்த 31-ம் தேதி ஈரானில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா உயிரிழந்தார். இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் பவுத் ஷுக்கூரும் கொல்லப்பட்டார். இது மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE