ஈரானில் நடந்த வான் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற ஹமாஸ் தலைவர் வான் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலையை அரங்கேற்றியது இஸ்ரேல் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விருந்தினராக வந்தவரை கொன்ற இஸ்ரேலை பழிவாங்கு வோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா உள்ளிட்ட தலைவர்களை கொல்வோம் என இஸ்ரேல் ஏற்கெனவே கூறியது.

காசாவில் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் மற்றும் 4 பேரக் குழந்தைகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஈரான் புதிய அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றிருந்தார். பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பிறகு, விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இஸ்மாயில் ஹனியா மற்றும் அவரது மெய்க்காப்பாளர் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என ஈரான் விசாரணை நடத்தி வருகிறது. இது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் என ஹமாஸ்அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ள

னர். இதுகுறித்து இஸ்ரேல் அரசுதரப்பில் கேட்டபோது, வெளிநாட்டில் நடைபெறும் சம்பவங்களுக்கு நாங்கள் பதில் அளிப்பதில்லை’’ என தெரிவிக்கப்பட்டது. ஈரான் மதத் தலைவர் அயதுல்லா விடுத்துள்ள செய்தியில், ‘‘ஈரான் நாட்டுக்கு விருந்தினராக வந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை இஸ்ரேல் கொன்றுள்ளது. அதற்கு கடுமையான தண்டனை கிடைக்கும். எங்கள் விருந்தினரை எங்கள் மண்ணில் கொன்றதற்கு பழிவாங்குவதை எங்களை கடமையாக கருதுகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டதற்கு பாலஸ்தீனம், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

‘‘அமைதியை ஏற்படுத்தும் நோக்கம் இஸ்ரேல் அரசுக்கு இல்லை என்பது இந்த சம்பவம் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளது’’ என்று துருக்கி வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா கமாண்டர் உயிரிழப்பு: பெய்ரூட்: வடக்கு இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் என்ற இடத்தில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கடந்த 27-ம் தேதி நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில், கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 12 சிறுவர்கள் உயிரிழந்தனர். இதற்கு ஹிஸ்புல்லா கமாண்டர் ஃபாத் சுகர் காரணம் என இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது.
இந்நிலையில் லெபனானின் பெய்ரூட் நகரில் ஃபாத் சுகர் தங்கியிருந்த வீட்டின் மீது இஸ்ரேல் போர் விமானம் நேற்று குண்டு வீசியது. இதில் ஃபாத் சுகர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், இவரது மரணத்தை லெபனான் உறுதிப்படுத்தவில்லை.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்த தாகவும், 74 பேர் காயம் அடைந்ததாகவும் லெபனான் கூறியுள்ளது. இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில், ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE