நேபாளத்தில் விமான விபத்து: ஓடுபாதையிலேயே விழுந்து நொறுங்கியதில் 18 பேர் பலி

By செய்திப்பிரிவு

காத்மாண்டு: நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் சில விநாடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பற்றி எரிய அதிலிருந்த பயணிகள் 18 பேரும் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விபத்துக்குள்ளான விமானம் சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. காத்மாண்டுவில் இருந்து போக்காராவுக்கு இந்த விமானம் இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட உடன் விமானத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது. அதனை விமான நிலையத்தில் இருந்த தீயணைப்புப் படை வீரர்கள் அணைத்துள்ளனர். தொடர்ந்து காவலர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேபாளத்தில் விமான விபத்து அவ்வப்போது ஏற்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள போக்காரா விமான நிலையத்தில் எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியதால் அந்த விபத்து ஏற்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE