கனடாவில் இந்து கோயில் சேதம்: விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்

By செய்திப்பிரிவு

எட்மன்டன்: கனடாவின் எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கோயில் மீது கருப்பு மையினால் சில எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அதிகரித்து வரும் பிரிவினைவாத போக்கை தடுக்கும் வகையில். இந்தச் செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அரசு கோரியுள்ளது. இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

“எட்மன்டன் நகரில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோயிலில் இந்த செயல் நடந்துள்ளது. இதில் முரணான வாசகங்கள் சிலவும் கோயிலின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இந்த நாசவேலையை விஎச்பி கனடா கடுமையாகக் கண்டிக்கிறது. நாட்டில் அமைதியை விரும்பும் இந்து சமூகத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலான இந்த பிரிவினைவாத செயலுக்கு எதிராக தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அரசை கேட்டுக் கொள்கிறோம்” என விஸ்வ ஹிந்து பரிஷத் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

கனடாவில் உள்ள இந்து கோயில்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எட்மன்டன் சுவாமிநாராயண் கோயிலை சேதப்படுத்தியது அவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப்பை தனிநாடாக மாற்ற வேண்டும் என்றும், அதற்கு காலிஸ்தான் என பெயரிட வேண்டும் என்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கோரி வருகின்றனர். கனடா அரசு இவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவுக்கு எதிராகவும், இந்து மதத்துக்கு எதிராகவும் அங்கு காலிஸ்தான் ஆதரவு தரப்பினர் இப்படி செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE