“இலங்கையில் அதிபர் தேர்தலை ஓர் ஆண்டுக்கு தள்ளிவைக்க வேண்டும்” - சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கையில் அதிபர் தேர்தலை ஓர் ஆண்டுக்கு தாமதப்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 225 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெற்று மகிந்த ராஜபக்ச பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். உலகளாவிய கரோனா பரவல், அதனைத் தொடர்ந்து இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தினால் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர்.

நாடாளுமன்றம் மூலம் தேர்வு: 22.07.2022 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பின்னர் பிரதமராக தினேஷ் குணவர்தனவும் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகின்றனர். அதிபர் ரணில் விக்ரம சிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்தில் நிறைவடைவதால், அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் நடத்தப்படும், என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், இலங்கை வட மகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ''அதிபர் தேர்தலை தாமதப்படுத்துவது இலங்கை முழுமைக்கும் நன்மை பயக்கும். குறிப்பாக தமிழர்களுக்கு நன்மை பயக்கும். இலங்கை அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை தான் காணப்படுகிறது. இதனால் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும்.

இலங்கை பொருளாதார நெருக்கடிகள் காணப்படுகிறது. இந்நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாது போனால் மேலும், மேலும் மோசமான பொருளாதார பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். தேர்தலுக்காக பெருமளவிலில் நிதி செலவழிக்கப்பட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டு, அதுவும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். எனவே, அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து ஒரு வருட காலத்திற்கு அதிபர் தேர்தலை பிற்போட வேண்டும்'' என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE