மோடி முதல் ட்ரூடோ வரை: பிரபலங்களின் ஏஐ ஃபேஷன் ஷோ வீடியோவை பகிர்ந்த எலான் மஸ்க்

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துள்ளார். இதில் பிரதமர் மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அளவில் அறியப்படும் பிரபலங்களில் ஏஐ அவதார் ஒய்யார நடை போட்டுள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் உலகில் அசல் எது, போலி எது என்பதை அடையாளம் காண்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது. மறுபக்கம் டீப்ஃபேக் அச்சுறுத்தலும் நிலவுகிறது. இந்நிலையில், வேடிக்கையான வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அதை மஸ்க் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மெட்டா சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் நிறுவனம் சிஇஓ டிம் குக், போப் பிரான்சிஸ் ஆகியோரின் ஏஐ அவதார்கள் இதில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொருவரும் விதவிதமாக அவுட்ஃபிட் அணிந்து ராம்ப் வாக் போட்டுள்ளனர்.

சுமார் 1.23 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த வீடியோ. இதில் போப் பிரான்சிஸ் முதல் நபராக வருகிறார். தொடர்ந்து ஒவ்வொருவராக அணிவகுத்து செல்கின்றனர். இதில் பராக் ஒபாமா அதிக நேரம் வருகிறார். அவர் பல்வேறு ஆடைகளை அணிந்துள்ளது போல வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. அது அனைத்திலும் அவர் கச்சிதமாக பொருந்தி போகிறார். இறுதியாக பில் கேட்ஸ் வருகிறார். அதில் தனது கையில் உள்ள பதாகையில் மைக்ரோசாப்ட் கிளவுட்ஸ்டிரைக் பிரச்சினையை குறிப்பிடும் வகையில் வீடியோ நிறைவடைகிறது. சிலருக்கு இதில் வித்தியாசமான காஸ்ட்யூம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சுமார் 6 கோடி பேருக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE