வங்கதேச போராட்டம் | கண்டதும் சுட அரசு உத்தரவு; எல்லையில் தமிழக மாணவர்கள் தவிப்பு

By செய்திப்பிரிவு

டாக்கா: அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பான வங்கதேச போராட்டத்தில் 130-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மீறி வெளியே வருவோரைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்களிடம்உறுதிப்படுத்தினார்.

மாணவர்களின் போராட்டத்துக்கு காரணம் என்ன?: போராட்டத்துக்கு காரணம், அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் அந்நாட்டின் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவுதான். நீதிமன்றத்தின் அந்த உத்தரவு மாணவர்களைக் கிளர்ந்தெழச் செய்து வீதிகளில் இறங்கிப் போராடத் தூண்டியுள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இடையில் ரத்துச் செய்யப்பட்டிருந்த இந்த இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்று வங்கதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1-ம் தேதி முதல் அங்கு போராட்டம் தொடங்கியது.

படைவீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினால், அது தங்களுக்கான வேலை வாய்ப்புகளை பாதிக்கும் என்று வங்கதேசத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலர், படைவீரர்களின் குடும்பத்தினர் என்ற பட்டியலின் உண்மைத் தன்மை குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்த இடஒதுக்கீடு முறையினால் நியாயமற்ற முறையில் சிலர் பலன் அடையக்கூடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமானது, தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று போராடும் வங்கதேச மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமராகி இருக்கும் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களுக்குதான் இந்த இடஒதுக்கீடு பயனளிக்கும் என்றும் மணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு சனிக்கிழமை வரை 105 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி வளாகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தடைபட்டன.

கலவரத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மொபைல் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மறு உத்தரவு வரும் வரையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், காவல் துறையின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதன் முகப்பு பக்கங்களில் ‘இனி இது போராட்டம் இல்லை, இப்போது இது போர்’ என்ற வாசகங்கள் ஒளிர்கின்றன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வங்கதேசத்தின் ஆளுங்கட்சி நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைதியை நிலைநாட்ட ராணுவத்துக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் தான் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கதேச எல்லையில் தவிக்கும் தமிழ் மாணவர்கள்: இதற்கிடையே, வங்கதேசத்தில் நடந்து வரும்போராட்டம் காரணமாக அங்கு பயின்று வரும் இந்திய மாணவர்களை கல்லூரி நிர்வாகம், இந்தியா - வங்கதேசம் எல்லையில் இறக்கிவிட்டுள்ளது.

மொத்தம் 150 மாணவர்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அவர்களில் 32 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. காலை முதல் உணவு இல்லாமலும், நாடு திரும்ப முடியாமலும், அந்த மாணவர்கள் மேற்கு வங்க எல்லைப் பகுதியில் உள்ள ஹில்லி என்ற பகுதியில் தவித்து வருகிறார்கள்.

கடந்த நான்கு நாட்களாக இணையம் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை இல்லாமல், வீட்டை தொடர்புகொள்ள முடியாமல் தவித்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். கல்லூரி பேருந்து மூலம் வங்கதேச எல்லையில் இறக்கிவிட்ட நிலையில், தாங்களாக தான் இந்திய எல்லையை கடந்துவந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். வீடு திரும்ப அரசு உதவி செய்ய அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

மேலும்