சுற்றுலா பயணிகளை வெளியேற சொல்லும் ஸ்பெயின் மக்கள்: வீதிகளில் போராட்டம் தீவிரம்!

By செய்திப்பிரிவு

பார்சிலோனா: ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 13.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் ஐஎன்இ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 3.30 கோடி சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உள்நாட்டு மக்களை சோர்வடைய செய்துள்ளது. மேலும், அதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் அங்காடிகள் நிறைந்த வீதியான La Rambla-வில் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது சுற்றுலா பயணிகளை நோக்கி இங்கு வர வேண்டாம் என்றும் கோஷங்கள் எழுப்பினர். கூடவே தண்ணீர் பீய்ச்சும் விளையாட்டுத் துப்பாக்கியை கொண்டு தண்ணீரை வெளியேற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் மாலாகா, கேனரி தீவுகள் போன்ற இடங்களிலும் இதே நிலை தான். அதிகளவிலான சுற்றுலா பயணிகளின் வருகையால் சில பகுதிகளில் மக்கள் வசித்து வரும் வீடுகளுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளதாகவும். சில வீடுகள் சுற்றுலா பயணிகள் தங்கி செல்லும் வகையில் தற்காலிக விருந்தினர் இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளதும் ஸ்பெயின் மக்களின் போராட்டத்துக்கு காரணமாக உள்ளது. அதோடு செலவுகளும் கூடியுள்ளது இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கலை கையாளும் வகையில் தற்காலிக விருந்தினர் இல்லங்களுக்கான அனுமதி புதிதாக வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதிகளை புதுப்பிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பார்சிலோனா மேயர் தெரிவித்துள்ளார். பார்சிலோனாவில் உள்ள குவெல் பூங்காவிற்கு உள்ளூர் மக்கள் செல்ல வேண்டுமென்றா கூட மொபைல் அப்ளிகேஷன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் மக்களின் இந்த போராட்டம் அங்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருபவர்களை சிந்திக்க செய்துள்ளது. அதே நேரத்தில் தங்களது வணிகம் பாதிக்கப்படும் சூழல் இருந்தாலும் இது குறித்து உள்ளூர் வணிகர்கள் கருத்து எதுவும் சொல்ல முடியாத சூழலில் உள்ளனர். இதற்கு ஸ்பெயின் அரசு துரிதமாக தீர்வு காண வேண்டியுள்ளது. ஏனெனில், அடுத்த மாதம் பெரிய அளவில் தங்களது போராட்டத்தை மக்கள் முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE