ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது இளைஞரின் பின்புலம் என்ன? | HTT Explainer

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது இளைஞரின் பின்புலம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்? - ட்ரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவர் பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பார்க் பகுதியைச் சோ்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்பது விசாரணையில் தெரியவந்தது. க்ரூக்ஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட குடியரசுக் கட்சிக்காரர் (Republican Party) என்பதை சில தரவுகள் காட்டுகின்றன. அவர் 2021-ல் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழுவான `ஆக்ட் ப்ளூ’ (ActBlue) அமைப்புக்கு 15 டாலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேடையில் ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது, சுமார் 400 அடி தொலைவில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்தபடி, ஏஆர்-15 ரக துப்பாக்கியால் சுட்டுள்ளார். முதல் சுற்றில் 3 குண்டுகள், 2-வது சுற்றில் 5 குண்டுகள் என மொத்தம் 8 குண்டுகள் பாய்ந்துள்ளன. இதில் ஒரு குண்டு மட்டும் ட்ரம்ப்பின் வலது காதின் மேல் பகுதியை துளைத்தபடி சென்றுள்ளது.

க்ரூக்ஸின் தந்தை ஒரு பதிவுசெய்யப்பட்ட குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. பள்ளியிலே மிகவும் அமைதியான மாணவராக மேத்யூஸ் க்ரூஸ் இருந்துள்ளார். மேத்யூஸ் க்ரூக்ஸ் 2022-ம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு நர்சிங் பயிற்சியை முடித்த அவர், வீடுகளுக்கே சென்று நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் நபராகவும் பணியாற்றி வந்துள்ளார். க்ரூக்ஸ் மிகவும் புத்திசாலி, வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் எனத் தெரிகிறது. கணினி தொடர்பான பணிகளில் ஈடுபடுவது, கேம் விளையாடுவதில்தான் இவருக்கு ஆர்வம் இருந்ததாக அவரின் தோழர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் எதற்காக ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது வீட்டில் முழுமையாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முழு விசாரணைக்கு பிறகு தகவல்களை வெளியிடுவோம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தனது முதல் வாக்கை செலுத்த தகுதி பெற்றிருந்தார். அந்த நபர் அடையாள அட்டையை வைத்திருக்கவில்லை என்பதால் புலனாய்வு அதிகாரிகள் அவரை அடையாளம் காண டிஎன்ஏவைப் பயன்படுத்தினர் என்றும் எஃப்பிஐ தெரிவித்துள்ளது. எனினும், ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணையில் இன்னும் தெரியவரவில்லை.

பரபரக்கும் தேர்தல் களம்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (78) போட்டியிட உள்ளார். இதற்காக இப்போதே அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பென்சில்வேனியா மாநிலத்தின் பட்லர் நகரில் குடியரசு கட்சி சார்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ட்ரம்ப் பங்கேற்றிருந்தார்.

அதாவது, 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இந்தத் தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

“எங்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டு; ஆனால், நாங்கள் எதிரிகள் அல்ல” என்று ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE