கடைசி நொடியில் தலையை திருப்பியதால் உயிர் பிழைத்த ட்ரம்ப்!

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடைசி நொடியில் தலையை திருப்பும் ஸ்லோ மோஷன் வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதற்கிடையே, குண்டு காயத்தால் காதில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில், ட்ரம்ப்பை பாதுகாப்பு படையினர் உடனே மீட்டு, பட்லர் நினைவு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மணிநேரத்துக்கு பிறகு, அவர் அங்கிருந்து விமானம் மூலம் நியூஜெர்ஸிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்தச் சூழலில், துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்பாக ட்ரம்ப் கடைசி நொடியில் தலையை திருப்பும் ஸ்லோ மோஷன் வீடியோ வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் ட்ரம்ப் குண்டுகள் பாய்வதற்கு ஒரு மைக்ரோநொடிக்கு முன்னால் எதேச்சையாக தலையை திருப்புகிறார். இந்த இடைவெளியில் குண்டுகள் அவரது காதை நோக்கி பாய்கின்றன. அப்படி திருப்பாமல் இருந்திருந்தால் அவை ட்ரம்ப்பின் தலையின் பின்பக்கத்தில் பாய்ந்திருக்கக் கூடும்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள வெள்ளை மாளிகை மருத்துவர் ரான்னி ஜாக்ஸன், மேடையில் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் சட்டவிரோத குடியேற்றம் குறித்த பட்டியலை பார்ப்பதற்காக தலையை திருப்பியதாகவும், அந்த பட்டியல்தான் தனது உயிரை காப்பாற்றியதாகவும் ட்ரம்ப் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE