பொதுத் தேர்தலில் லேபர் கட்சி அமோக வெற்றி: பிரிட்டன் பிரதமர் ஆனார் கெய்ர் ஸ்டார்மெர்

By செய்திப்பிரிவு

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் லேபர் கட்சி 412 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மெர் பதவியேற்றார்.

பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்த காலகட்டத்தில் உட்கட்சி பூசல் காரணமாக போரிஸ் ஜான்சன், லிஸ்டிரஸ் என பிரதமர்கள் மாறிக் கொண்டே இருந்தனர். கடைசியாக5-வது நபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் (44) பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், மொத்தம் உள்ள650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் பொதுத் தேர்தல்நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இதில், எதிர்க்கட்சியான லேபர்கட்சி 418 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

அதன்படியே தேர்தல் முடிவும் இருந்தது. லேபர் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 326 என்ற இலக்கை தாண்டி, 412 இடங்களுக்கு மேல்வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற இடங்களில் இதர கட்சிகள் வென்றன.

லேபர் கட்சியின் வெற்றியை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மெர் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சியமைக்க மன்னர் சார்லஸ் உத்தரவிட்டுள்ளார்.

கெய்ர் ஸ்டார்மெர், தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை தொழிற்சாலைக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரித்தவர். தாய் செவிலியராக பணியாற்றியவர். லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற கெய்ர் ஸ்டார்மெர், மனித உரிமைகளை பாதுகாக்கும் வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2015-ல் லேபர் கட்சியில் இணைந்து எம்.பி.யானார். 2020-ல் லேபர் கட்சியின் தலைவரானார்.

தேர்தல் வெற்றியை தொடர்ந்து, தனது ஆதரவாளர்கள் இடையே அவர் நேற்று உரையாற்றினார். அப்போது அவர், “14 ஆண்டுகளுக்கு பிறகு, பிரிட்டனுக்கான புதிய அத்தியாயம், எதிர்காலம் தொடங்கியுள்ளது. பிரிட்டன் மக்களால் இந்த மாற்றம் சாத்தியமாகிஉள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நாம் மேற்கொண்ட கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. மாற்றத்துக்கான பணியை தொடங்குவோம். அரசியல் என்றாலே, அது பொது சேவை செய்வதற்கானதுஎன்ற நிலையை மீண்டும் உருவாக்குவோம்” என்றார்.

ரிஷி சுனக் ராஜினாமா: இதற்கிடையே, பிரதமர் பதவியை ரிஷி சுனக் நேற்று ராஜினாமா செய்தார். அவரது கட்சிபடுதோல்வியை சந்தித்த நிலையிலும், வடக்கு இங்கிலாந்து தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். “பிரிட்டனில் ஆட்சி மாற்றம் கட்டாயம் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். மக்களின் கோபமும், ஏமாற்றமும் எனக்கு தெரிகிறது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்” என்றார். புதிய பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இங்கிலாந்தின் தேர்தல் வரலாற்றில் இது கன்சர்வேட்டிவ் கட்சியின் மிக மோசமான தோல்வியாக கருதப்படுகிறது.

ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் தவறான கொள்கை முடிவுகளே அக்கட்சியின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேநேரம், விலைவாசி உயர்வு பிரச்சினை, அரசு திட்டங்களில் முதலீடு குறைவு போன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி கெய்ர் ஸ்டார்மெர் பிரச்சாரம்செய்தார். இதற்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்தது. தேர்தலுக்கு முன்பாக சம்பள உயர்வு கோரிஅரசு மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த பிரச்சினையும் லேபர் கட்சிக்கு சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி வாழ்த்து: புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மெருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘பிரிட்டன் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற கெய்ர் ஸ்டார்மெருக்கு வாழ்த்துகள். இந்தியா - பிரிட்டன் உறவை வலுப்படுத்துவதிலும், பரஸ்பர வளர்ச்சிக்கும் நாம் ஆக்கப்பூர்வமாக, ஒத்துழைப்புடன் செயல்படுவதை எதிர்நோக்குகிறேன்’ என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் ரிஷி சுனக்குக்குநன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘பிரிட்டனில் உங்கள் சிறப்பான தலைமைக்கும், இந்தியா-பிரிட்டன் நல்லுறவை வலுப்படுத்துவதில் நீங்கள் ஆற்றிய பங்களிப்புக்கும் நன்றி. சிறந்த எதிர்காலம் அமைய உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல் தமிழ் எம்.பி. உமா குமரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: லேபர் கட்சி சார்பில் ஸ்டார்ட்போர்டு - போ தொகுதியில் போட்டியிட்ட இலங்கையை சேர்ந்த பிரிட்டன் தமிழ் பெண் உமா குமரன் வெற்றி பெற்று, எம்.பி. ஆகியுள்ளார். பிரிட்டன் வரலாற்றில் முதல் தமிழ் எம்.பி. இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லேபர் கட்சி சார்பில் ப்ரீத் கவுர் கில், கனிஷ்கா நாராயண், நவேந்து மிஸ்ரா, லிசா நாண்டி, ஷிவானி ராஜா, தன்மன்ஜீத் சிங் தேசி, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், முன்னாள் உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல், ககன் மொஹிந்திரா, சுலா ப்ராவர்மேன் என இந்திய வம்சாவளியினர் பலர் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE