லண்டன்: “உடனடியாக மாற்றத்துக்கான பணி தொடங்குகிறது. அதில் நாட்டுக்கே முன்னுரிமை, கட்சி என்பது இரண்டாம் பட்சமே” என்று பிரிட்டனில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி அறுதிப் பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது. அங்கு மொத்தமுள்ள 650 இடங்களுக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் லேபர் கட்சி 412 இடங்களில் வெற்றி பெற்றது. கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் மட்டுமே வென்றது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையுடன் லேபர் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றார்.
அதனைத் தொடர்ந்து பிரதமராக அவர் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் “ரிஷி சுனக்குக்கு நன்றி. நாட்டின் முதல் பிரிட்டிஷ் ஆசிய பிரதமராக இருந்த அவரின் சாதனை மகத்தானது. அதற்கு அதிகப்படியான ஒரு கூட்டு முயற்சி தேவை. அதனை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது” என்றார். தொடர்ந்து பேசியவர், “தற்போது மாற்றத்துக்கும், அரசியலானது சேவைக்கு திரும்புவதற்கும் நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.
மக்களின் தியாகத்துக்கும் அரசியல்வாதிகளிடம் ருந்து அவர்கள் பெறும் சேவைகளுக்குமான இடைவெளி அதிகமாகும்போது, அது தேசத்தின் மனதில் ஒரு சோர்வை உண்டாக்குகிறது. எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. இந்தக் காயத்தையும் நம்பிக்கையின்மையையும் வார்த்தைகளால் இல்லை, செயல்களால் மட்டுமே சரி செய்ய முடியும். எனக்கு அது தெரியும். சேவை என்பது ஒரு சிறப்புரிமை, உங்கள் அரசாங்கம் ஒவ்வொரு தனிமனிதனையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற எளிய ஒப்புதலுடன் இன்று நாம் தொடங்கலாம்.
நீங்கள் தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும், குறிப்பாக நீங்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் எனது அரசு உங்களுக்கு சேவை செய்யும் என்று நான் நேரடியாக உங்களுக்குச் சொல்கிறேன். அரசியல் நன்மைகள் செய்வதற்கான சக்தி. நாங்கள் அதனை உங்களுக்கு காட்டுவோம். நாங்கள் தொழிலாளர் கட்சியை சேவைக்கு திரும்புவதற்காக மாற்றியுள்ளோம். அப்படிதான் நாங்கள் ஆட்சி செய்ய உள்ளோம்.
நாட்டுக்கே முன்னுரிமை... கட்சி இரண்டாம் பட்சமே... நான் நேர்மையாக இருந்தால் சேவை என்பது நம்பிக்கைக்கான ஒரு நிபந்தனை மட்டுமே. நாட்டுக்கு மிகப் பெரிய மீட்பு தேவை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நாம் யார் என்பதை மீண்டும் கண்டடைய வேண்டும். வரலாற்றில் எவ்வளவு பெரிய புயல் அடிக்கிறது என்பது முக்கியமில்லை. நமது தேசத்தின் மிகப் பெரிய பலமே அமைதியான நீர்நிலைகளை நோக்கி நாம் பயணிப்பதே. இதைச் செய்வதற்கான திறன் அரசியல்வாதிகளைப் பொறுத்தது. குறிப்பாக நிதானம் மற்றும் ஸ்திரத்தன்மையுடன் இருப்பவர்களைப் பொறுத்தது. நான் அதைச் செய்வேன்.
மில்லியன் கணக்கானவர்கள் பாதுகாப்பின்மைக்கு ஆளாகியுள்ளனர் என்று ஒரு குருட்டு நம்பிக்கை உருவாகியுள்ளது. மக்கள் கடினமாக உழைத்து சரியானவற்றைச் செய்கின்றனர். ஆனால், கேமராகள் இயங்குவது நிற்கும்போது அவர்களின் வாழ்க்கை மறக்கடிக்கப்படுகிறது. அந்த மக்களுக்கு நான் ஒன்றைத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த முறை அப்படி நடக்காது. ஒரு நாட்டை மாற்றுவது என்பது ஸ்விட்ச் ஒன்றை போடுவது போல எளிதானது இல்லை அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். ஆனால் மாற்றத்துக்கான வேலை இன்றே தொடங்குகிறது.
பொறுமையைான மற்றும் அமைதியான மறு உருவாக்கத்துக்கு இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. மரியாதையுடனும் பணிவுடனும் தேசத்தை புதுப்பிக்கும் இந்தப் பணியில் இணைந்து கொள்ள உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். நமது பணி அவசரமானது. அதனை நாம் இன்றே தொடங்குவோம்" என்று கீர் ஸ்டார்மர் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல்: முன்னதாக, பிரிட்டனில் நேற்று (ஜூலை 4) நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 40 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 4.6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இதில் லேபர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி முற்று பெற்றது. கடந்த 2005-ம் ஆண்டு நடந்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றது. அப்போது கார்டன் பிரவுன் பிரதமராக இருந்தார். 2010 தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்தது. 14 ஆண்டுக்குப் பிறகு லேபர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
யார் இந்த கீர் ஸ்டார்மர்? - கீர் ஸ்டார்மர் 1962-ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாய் செவிலியராக வேலை செய்து வந்தார். பள்ளிப் படிப்பை முடித்த ஸ்டார்மர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவருடன் பிறந்தவர்கள் மூன்று நபர்கள் ஆவார்கள். இவர் சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகிறார்.
கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக இருந்தார். டோனி பிளேயர் பிரதமராக இருந்த போது பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த நிலையில், அதை மிகக் கடுமையாக எதிர்த்தவர் தான் இந்த ஸ்டார்மர் என்பது கவனிக்கத்தக்கது.
2015-ல் தான் இவர் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார். ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் எம்.பி.யாக தேர்வானார். இவரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன. இதையடுத்து ஸ்டார்மர் 2020 இல் லேபர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
35 mins ago
உலகம்
1 hour ago
உலகம்
3 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago