“ஹேக் செய்யப்படும் ஆபத்து” - அமெரிக்க தேர்தலில் இவிஎம் இயந்திரங்களை அகற்ற எலான் மஸ்க் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஹேக் செய்யப்படும் ஆபத்து மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்க தேர்தல்களில் மின்னணு வாக்குப்பகுதி இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் முதன்மை தேர்தலில் ஏற்பட்ட வாக்குப் பதிவு முறைகேடுகள் குறித்து சுயேச்சை அதிபர் வேட்பாளரான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவில், “போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற முதன்மைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால், சிக்கல் கண்டறியப்பட்டு வாக்குப் எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. ஒருவேளை ஆவணங்கள் இல்லையென்றால் நீதிமன்றத்தில் என்ன நடக்கும்?” என்று கூறியிருந்தார்.

அவரது இந்த பதிவை ரீ-போஸ்ட் செய்துள்ள எலான் மஸ்க், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் அவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து சிறியதாக இருந்தாலும், மிக அதிகமாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 2 அன்று, போர்ட்டோ ரிக்கோவில் புதிய முற்போக்கு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைத் தேர்தல் நடந்தது.

இதில் நூற்றுக்கணக்கான வாக்குச் சீட்டுகள் தவறான முடிவுகளைக் காட்டுவதாக இரு கட்சிகளும் குற்றம்சாட்டின. இதனையடுத்து தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தியது.

முரண்பாடுகள் கண்டறியப்பட்ட பின்னர் மின்னணு வாக்குப்பதிவு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE