காசா விவகாரத்தில் ஐ.நா செயல்பாடு: துருக்கி அதிபர் எர்டோகன் ஆவேசம்

By செய்திப்பிரிவு

அங்காரா: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஐ.நா அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார் துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன்.

“ஐ.நா-வின் ஆன்மா காசாவில் மாண்டுவிட்டது. தனது சொந்த ஊழியர்களை கூட அதனால் பாதுகாக்க முடியவில்லை. இன்னும் என்ன நடக்க வேண்டுமென காத்துக் கொண்டு உள்ளீர்கள். இஸ்லாமிய உலகத்துக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பொதுவான முடிவை எடுக்க ஏன் தாமதம்? இஸ்ரேல், காசாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது” என அவர் பேசியுள்ளார்.

காசா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் உலக நாடுகள் வலியுறுத்தி வரும் வேளையில், எகிப்து எல்லையோரம் உள்ள காசாவின் ஒரு பகுதியை இஸ்ரேல் படைகள் கைப்பற்றியுள்ளன. மேலும், இந்த தாக்குதல் அடுத்த ஏழு மாத காலம் வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இஸ்ரேல் பாதுகாப்பு படை, காசாவின் ரஃபா நகரின் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 82 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE