காசா: ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” என்ற காசா ஆதரவு வாசகம் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது.
2023 அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 36,171 -க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 81,136 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது. பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, மத்திய காசாவில் தனது தாக்குதலை முழு வீச்சில் நடத்திய இஸ்ரேல் இப்போது தெற்கு காசாவைக் குறிவைத்துள்ளது. தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் தான் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 26) குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இது குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையை கண்டிக்கும் வகையில், “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” புகைப்படமும் வேகமாகப் பரவியது. இஸ்டாகிராமில் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.
அந்தப் புகைப்படத்தில் மிக நெருக்கமாக அமைந்துள்ள தற்காலிக கூடாரங்கள் இடம்பெற்றுள்ளன. பாலைவனப் பின்னணியில், மலைகளுக்கு இடையே தற்காலிகக் கூடாரங்களில் இருக்கும் பாலஸ்தீனர்களின் துயரமான நிலையை எடுத்துரைப்பது போல் அந்தப் படம் அமைந்தது.
இந்தப் படத்தை பாலஸ்தீன பின்புலம் கொண்ட அமெரிக்க நடிகர் பெட்ரோ பாஸ்கல், மாடல்கள் பெல்லா, கிகி ஹாடிட், பிரான்ஸ் நாட்டு கால்பந்து வீரர் ஓஸ்மானே டெம்பேல் ஆகியோர் தங்கள் இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். ட்விட்டரில் இந்த் ஹேஷ்டேக் 2.75 கோடி முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் தரப்போ ஹமாஸ் அமைப்பின் மிக முக்கியப் புள்ளிகளான இருவரைக் கொலை செய்யவே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும். அந்த இலக்கை எட்டியதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “காசா- எகிப்து எல்லையை இஸ்ரேலியப் படைகள் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. 20 சுரங்கங்களை கண்டுபிடித்துள்ளோம். இவை எகிப்தின் சினாய் நகருக்குச் செல்கின்றன.
எகிப்து எல்லையை ஒட்டிய 14 கிமீ ஃபிலடெல்ஃபி காரிடர் , 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பஃபர் பகுதி. ஆயுதக் கடத்தலைத் தடுக்க உருவாக்கப்பட்டது. 2006-ல் இஸ்ரேல் இப்பகுதியில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டன. அடுத்த ஆண்டே ஹமாஸ் அப்பகுதியைக் கைப்பற்றியது.
அதன்பின்னர் அப்பகுதி பெரும்பாலும் ஹமாஸ் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இப்போது காசா- எகிப்து எல்லையை இஸ்ரேலியப் படைகள் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 7 மாதங்களுக்கு தொடரும்: இணையத்தில் போர் நிறுத்த ஆதரவுக் குரல்கள் வலுத்து வரும் சூழலில் இன்னும் 7 மாதங்களுக்காவது காசா மீதான தாக்குதல் தொடரும் என்று அறிவித்துள்ளது.
இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாக்ஸி ஹனேக்பி கூறுகையில், “2024 ஆம் ஆண்டை யுத்த ஆண்டாகத் தான் இஸ்ரேல் அறிவித்தது. அப்படியென்றால் இன்னும் 7 மாதங்கள் வரை தாக்குதல் தொடரும் என்றே அர்த்தம். ஹமாஸின் ஆட்சி, ராணுவ அதிகாரங்களை முற்றிலுமாக அழிக்கும்வரை தாக்குதல் தொடரும்” என்றார்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து இத்தகைய பகிரங்க அறிவிப்பு எதையும் அந்நாடு விடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன? - இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடந்த 2007-ம் ஆண்டு ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதிருந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல மோதல்கள் நடந்துள்ளன. காசா எல்லையில் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவம் மோதிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெறும்.
காசா பகுதியானது ஹமாஸின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை தீவிரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹமாஸுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து காசாவைக் கைப்பற்ற முயற்சிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்வதும் தாக்குதல் நடத்திக் கொள்வதும் தொடர்கதையாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago