வங்கதேச எம்.பி கொலையில் நடந்தது என்ன? - காவல் துறை வெளியிட்ட பகீர் பின்னணி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: வங்கதேச எம்.பி. அன்வருல் ஆசிம் அன்வர் கொலையில் பல்வேறு பகீர் தகவல்களை கொல்கத்தா குற்றப் புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது. ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தை விஞ்சும் அளவுக்கு எம்.பி.யை வலையில் சிக்கவைத்து இந்தக் கொலை நடந்துள்ளது. இந்தக் கொலைக்காக ரூ.5 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொல்கத்தாவில் கொலை செய்யட்ட அன்வரின் உடலில் இருந்து தோல் உரிக்கப்பட்டு, எலும்புகள் நொறுக்கப்பட்டு, பின்னர் உடல் பாகங்கள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு அவை நகர் முழுவதும் பல இடங்களில் வீசப்பட்டன என்று காவல் துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

யார் இந்த ஹவல்தார்? - ஜிகாத் ஹவல்தார் என்ற தொழில்முறை கசாப்புக் கடைக்காரர் ஒருவர் இதற்காக பெரும் கூலி கொடுத்து கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக கொல்கத்தா சிஐடி வட்டாரம் தெரிவிக்கின்றது. ஜிகாத் ஹவல்தார், வங்கதேசத்தின் குல்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர் எனத் தெரிகிறது.

இந்நிலையில், சிஐடி விசாரணையில் ஹவல்தார், தானும் மேலும் 4 வங்கதேச நபர்களும் சேர்ந்து எம்.பி.யை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அன்வரின் நண்பர் அக்தருஸ்மான் ஏவியே இந்தக் கொலையை செய்ததாகவும் அவர் கூறினார்.

கொலைக்குப் பின்னர் அன்வரின் உடலில் இருந்து தோலை நீக்கிவிட்டு பின்னர் உடல் பாகங்களை வெட்டி பல கவர்களில் அடைத்து அதனை நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு நால்வரும் கொண்டு சென்று வீசியதாகவும் ஹவல்தார் ஒப்புக் கொண்டார்.

கொலைச் சம்பவம் நடந்த வீடு எம்.பி.யின் நண்பரால் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடு. கொலையாவதற்கு முன்னால் ஒரு பெண்ணுடன் அவர் அந்த ஃப்ளாட்டுக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த ஃப்ளாட்டுக்கு அவரை வரவழைக்க அப்பெண் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அப்பெண்ணையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் பெயர் ஷிலாந்தி ரஹ்மான எனத் தெரிகிறது.

இந்தக் கொலை பற்றி வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கூறுகையில், “கொல்கத்தாவில் காணாமல் போன எம்.பி. அன்வர் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவரது உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்றார்.

வங்கதேச எம்.பி. அன்வர் கடந்த 12 ஆம் தேதி கொல்கத்தாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார். முதலில் வடக்கு கொல்கத்தாவின் பாரக்நகரில் தனது நண்பர் கோபால் பிஸ்வாஸ் வீட்டில் தங்கியுள்ளார். பின்னர் மே 13-ஆம் தேதி அன்வருல் அன்வர் வீட்டிலிருந்து மருத்துவரைக் காணச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார். மே 17 முதல் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனையடுத்து பிஸ்வாஸ் காவல் துறையில் புகார் கொடுத்தார். அதன்பின் நடந்த விசாரணையில் அன்வர் கொலை பற்றிய பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE