ஈரான் அதிபர் உயிரிழப்பு: இடைக்கால அதிபர் நியமனம் முதல் இஸ்ரேல் மறுப்பு வரை - முழு பின்னணி

By செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஈரானில் உள்ள மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில், அந்நாட்டு அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி (63) உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் உடன் சென்ற வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட 8 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

ஈரான் - அசர்பைஜான் இடையே ஓடும் அராஸ் நதியின் குறுக்கே இரு நாடுகளும் இணைந்து பிரம்மாண்ட அணை கட்டிஉள்ளன. அசர்பைஜானின் கோமர்லு நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற திறப்பு விழாவில், ஈரான் அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி, அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியெவ் உள்ளிட்டோர் பங்கேற்று அணை மதகுகளை திறந்துவைத்தனர். விழாவை முடித்துக் கொண்டு, ஈரான் அதிபர் ரெய்சி உள்ளிட்டோர் கோமர்லு நகரில் இருந்து ஈரானின் டேப்ரிஸ் நகருக்கு 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் புறப்பட்டனர்.

டேப்ரிஸ் நகரில் 2 ஹெலிகாப்டர்கள் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், ஈரான் அதிபர் ரெய்சி, வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மட்டும் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்து மாயமானது. ஈரானில் உள்ள கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் மலைப் பகுதியில் செல்லும்போது ஹெலிகாப்டர் தொடர்பை இழந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அப்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக, அங்கு ஹெலிகாப்டர் மூலம் தொடர்ந்து தேடுதல் பணியை மேற்கொள்ள முடியவில்லை. இதனால், ட்ரோன்கள் மூலம் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. துருக்கி, அசர்பைஜான், அர்மீனியா, இராக், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை ஈரான் அரசு நாடியது. ரஷ்யாவில் இருந்து2 சிறப்பு ஹெலிகாப்டர்களில் 50 மீட்புபடை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஈரானின் ஐஆர்ஜிசி படை வீரர்கள் தரைமார்க்கமாக மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

இந்நிலையில், மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கிடப்பதை துருக்கியின் ட்ரோன் நேற்று முன்தினம் இரவு கண்டுபிடித்தது. ஈரானின் ஐஆர்ஜிசி படையினர் அங்கு விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த அதிபர் உள்ளிட்ட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. ஈரான் அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி, வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அசர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக், மத போதகர் அயதுல்லா முகமது அலி அல்-ஹாசிம், அதிபரின் பாதுகாப்பு படை தலைவர் சர்தார் சையது மெஹதி மவுசாவி,விமானிகள் கர்னல் சையது தாஹிர், கர்னல் மோசின், விமான தொழில்நுட்ப நிபுணர் மேஜர் பெஹ்ருஸ் காதிமி, ஐஆர்ஜிசி படை மூத்த அதிகாரி அன்சர் அல்-மாதி ஆகிய 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

உயிரிழந்த அதிபர் இப்ராஹிம் ரெய்சி

இடைக்கால அதிபர் நியமனம்: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரெய்சி உட்பட 9 பேர் உயிரிழந்ததை ஈரான் அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, மதத் தலைவர் அயதுல்லா அலி காமெனி தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், இடைக்கால அதிபராக துணை அதிபர் முகமது மொக்பர் நியமிக்கப்பட்டார். ஈரான் சட்ட விதிகளின்படி, அடுத்த 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அதிபர் தேர்வுசெய்யப்படுவார். அதுவரை இடைக்கால அதிபராக மொக்பர் பதவி வகிப்பார்.

அதிபர் ரெய்சியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும். 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இன்று(மே 21) ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரெய்சி மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரான்அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா -ஈரான் உறவை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றென்றும் நினைவுகூரப்படும். இந்த இக்கட்டான சூழலில் ஈரானுக்கு இந்தியா ஆறுதலாக நிற்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் இராக், சவுதி அரேபியா, சிரியா, கத்தார் உட்பட பல்வேறுநாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக போரிட்டு வரும் ஹமாஸ், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா ஆகிய தீவிரவாத அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.

5,000 பேருக்கு மரண தண்டனை: கடந்த 1980 முதல் 1988 வரை நடந்தஈரான் - இராக் போரின்போது ஈரானை சேர்ந்த இடதுசாரி குழுவான முஜாகிதீன்-இ-கல்க் என்ற அமைப்பு ஈரான் ராணுவத்துக்கு எதிராக போரிட்டது. அவர்களுக்கு அப்போதைய இராக் அதிபர் சதாம் உசேன் ஆயுத உதவி வழங்கினார். போரின் முடிவில், முஜாகிதீன் இ-கல்க் அமைப்பை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அப்போது ஈரான் நீதித் துறையின் உயர் அதிகாரியாக பதவி வகித்த சையது இப்ராஹிம் ரெய்சி தலைமையிலான ஆணையம், அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றியது. நீதித் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ரெய்சி, கடந்த 2019-ல் அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 2021-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க,ரெய்சி உத்தரவிட்டார். இதை எதிர்த்து கடந்த ஆண்டில் பெண்கள் போராட்டம் நடத்தினர். இதில், பொதுமக்களில் 551 பேரும், பாதுகாப்பு படை வீரர்களில் 75 பேரும் உயிரிழந்தனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அதிபர் உயிரிழந்த நிலையில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என அஞ்சப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல் மறுப்பு - ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே தீவிர போர் நடந்து வருகிறது. இதில், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி, நிதி உதவியை ஈரான் வழங்கி வருகிறது. இந்த போரின் எதிரொலியாக, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசியும், 300 ட்ரோன்கள் மூலம் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம், ஈரானின் அணு உலைகளுக்கு அருகே அதிநவீன ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில், ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரெய்சி உயிரிழந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறும்போது, “ஈரானுக்கும் எங்களுக்கும் மோதல் இருப்பது உண்மைதான். ஆனால், ஹெலிகாப்டர் விபத்துக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’’ என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளன. ஈரான் நாட்டின் நிலவரத்தை மிக உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

12 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்