சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஆயுத கப்பலுக்கு ஸ்பெயினில் அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

மேட்ரிட் (ஸ்பெயின்): சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஆயுதக் கப்பல், ஸ்பெயின் துறைமுகத்தில் நின்று செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 27 டன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டென்மார்க்கை சேர்ந்த சரக்கு கப்பல் மரியான் டேனிகா. இந்த கப்பல் சென்னையிலிருந்து கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 8-ம் தேதி புறப்பட்டு இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை நோக்கி சென்றது. இந்த கப்பலில் சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் கன்டெய்னர்களை அனுப்பியுள்ளது. அந்த கன்டெய்னர்களை இஸ்ரேல் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் (ஐசிஎல்) நிறுவனம் பெறுகிறது.

செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் டிரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் இந்த கப்பல் ஆப்பிரிக்க நாடுகளை சுற்றிக் கொண்டு ஸ்பெயின் வழியாக இஸ்ரேல் செல்கிறது. தற்போது இந்த கப்பல் மொராக்கோவிலிருந்து ஸ்பெயின் நோக்கி செல்கிறது. வழியில் அந்த கப்பல் ஸ்பெயின் நாட்டின் கர்டஜெனா துறைமுகத்தில் வரும் 21-ம் தேதி நின்று செல்ல அனுமதி கோரியது.

இந்நிலையில், ஆன்டிகா மற்றும் பர்புடா நாட்டைச் சேர்ந்த ‘போர்கம்' என்ற சரக்கு கப்பல் ஸ்பெயின் துறைமுகத்தில் நின்று செல்ல ஏற்கெனவே அனுமதி கோரியிருந்தது. அந்த கப்பலில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதால், அந்த கப்பல் ஸ்பெயின் துறைமுகத்தில் நுழைய அனுமதிக்க கூடாது என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸை, கூட்டணி கட்சியான சுமர் என்ற இடதுசாரிக் கட்சி வலியுறுத்தியது. ஆனால், அந்த கப்பல் இஸ்ரேலுக்கு செல்லவில்லை என்பதும், செக் குடியரசு நாட்டுக்கு ராணுவ தளவாட பொருட்களை கொண்டு செல்கிறது என்றும் தெரியவந்தது.

இந்நிலையில்தான் மரியான் டேனிகா, ஸ்பெயின் துறைமுகத்தில் நின்று செல்ல அனுமதி கோரியது. அந்த கப்பலில் 27 டன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருப்பதை கண்டறிந்த ஸ்பெயின், அந்த கப்பல் தங்கள் நாட்டு துறைமுகத்தில் நின்று செல்ல அனுமதி மறுத்துவிட்டது.

இதுகுறித்து ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மேனுவல் அப்பேர்ஸ் கூறும்போது, ‘‘இஸ்ரேலுக்கு செல்லும் ஆயுதக் கப்பல், ஸ்பெயினில் தங்கிச் செல்ல அனுமதி மறுப்பது இதுவே முதல் முறை. இது எங்கள் நாட்டின் உறுதியான கொள்கையாக இருக்கும். மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் ஆயுதங்கள் தேவையில்லை. அங்கு அமைதிதான் வேண்டும்’’ என்றார்.

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஸ்பெயின் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறும்போது, ‘‘இதுகுறித்து ஆலோசித்து கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்