பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

By செய்திப்பிரிவு

முசாபர்பாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உச்சம் தொட்டுள்ளதால், மக்கள்கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், விலை உயர்வைக் கண்டித்தும் மின்சாரத்துக்கு வரி விலக்கு மற்றும் கோதுமை மாவுக்கு மானியம் கோரியும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு அவாமி செயற்குழு அழைப்பு விடுத்து இருந்தது. ஏராளமான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை இறங்கியது. இந்நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் வன்முறை வெடித்துள்ளது.

போராட்டத்தில் பங்கேற்க இருந்த 70 களச் செயல்பாட்டாளர்களை வெள்ளிக்கிழமை அன்று காவல் துறை கைது செய்தது. இதையடுத்து, கோபமடைந்த மக்கள் வெள்ளிக்கிழமை அன்றே அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான முசாபர்பாத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். மேலும் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இதனால், அங்கு பெரும் வன்முறை வெடித்தது.

இந்தச் சம்பவம் குறித்து போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், “எங்களது அடிப்படை உரிமையைக் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். ஆனால், பாகிஸ்தான் பாதுகாப்புபடையினர் எங்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE