இங்கிலிஷ் கால்வாயை கடக்க முயன்ற 5 பேர் பலி - பிரிட்டனில் மசோதா ஒப்புதலான நாளில் துயரமும் பின்புலமும்

By செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முனைப்பில் படகில் இங்கிலிஷ் கால்வாயைக் கடக்க முயன்றவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். இதனை பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகைகள் உறுதி செய்துள்ளன.

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களைத் தடுக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இச்சம்பவம் நடந்து கவனம் பெற்றுள்ளது. படகு கவிழ்ந்து 5 பேர் இறந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பிரான்ஸ் நாட்டின் வடக்கே உள்ள மிகப் பிரபலமான போலோன் மீன்பிடி துறைமுகம் பகுதிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதமாக குடியேற்ற தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அதீத பிடிவாதம் காட்டிவந்த நிலையில், இது மனிதத் தன்மையற்ற கொடூரமான சட்டம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2024-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து முதல் 3 மாதங்களில் மட்டும் 5,000 பேர் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர். 2023-ல் இவ்வாறாக நுழைந்தவர்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர் என்கிறது பிரிட்டன் அரசு புள்ளிவிவரங்கள்.

சட்டவிரோத குடியேற்ற பிரச்சினையும், சட்டமும்: இங்கிலாந்து நாட்டுக்குள் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறிய படகு மூலம் நுழையும் நபர்கள் அங்கு அகதிகளாக வசிக்க உரிமை கோரலாம். எளிய நடைமுறைகளில் அது சாத்தியப்பட்டதால் பல்வேறு நாடுகளில் இருந்தும் இவ்வாறாக சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைவது அதிகரித்தது.

அதேபோல் இத்தகைய செயல்களை சிலர் பணம் பெற்றுக் கொண்டு ஊக்குவிப்பதும் சர்ச்சையாகவே இருக்கிறது. இவ்வாறான சட்டவிரோத பயணங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைத் தடுப்பதில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆர்வம் காட்டிவந்தார். பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்தே அவர் இதில் ஆர்வம் காட்டிவந்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இது தொடர்பான மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் இருந்தது. இந்த நிலையில்தான் இன்று காலை ரிஷி சுனக் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக வரும் நபர்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான மசோதா நிறைவேற்றப்படுவது அவசியம். அதனைத் தடுத்து நிறுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம். அதைத் தடுக்க முயன்றால், அது நிறைவேற்றப்படும் வரை நாடாளுமன்றம் நடைபெறும்” என அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று (ஏப்.23) இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன. இதன்மூலம் இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் அதாவது ஜூன் அல்லது ஜூலை பாதிக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் விமானம் மூலம் ருவேண்டா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒருவழிப் பயணத்துக்கான டிக்கெட் எடுத்துக் கொடுக்கப்பட்டு ருவாண்டா அனுப்பிவைக்கப்படுவார்கள். இது பிரிட்டனில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் ரிஷி சுனக்குக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. சுனக் கொண்டுவந்துள்ள சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம் என அகதிகள் மறுவாழ்வுக்கான வழக்கறிஞர்கள் சூளுரைத்துள்ளனர். இந்தச் சூழலில்தான், இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முனைப்பில் படகில் இங்கிலிஷ் கால்வாயைக் கடக்க முயன்றவர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

மேலும்