ஈரான் சிறைபிடித்த கப்பலில் சிக்கியுள்ள 17 இந்திய மாலுமிகளை மீட்க இந்தியா பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேற்று முன்தினம் ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் 17 இந்திய மாலுமிகள் உள்ள நிலையில், அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அவர்களை மீட்பது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 1-ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ அதிகாரிகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரியஸ் என்ற சரக்குக் கப்பலை ஈரானின் கடற்படையான இஸ்லாமிய புரட்சிக் காவல் படை சனிக்கிழமை சிறைபிடித்தது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிகொண்டு அக்கப்பல் மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்துகொண்டிருந்தது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலமாக அந்தக் கப்பலில் தரையிறங்கிய இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினர் அந்தக் கப்பலை சிறைபிடித்து ஈரானின் கடற்பரப்புக்குள் கொண்டு சென்றனர்.

இந்தக் கப்பலில் மொத்தம் 25 மாலுமிகள் இருந்ததாகவும் அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியானது. இதையடுத்து இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஈரான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்துக்கு ஈரான் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உலக நாடுகள் சேர்க்க வேண்டும் என்றும் இஸ்ரேல் கோரியுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்று கடந்த வாரமே தகவல் தெரிவித்த அமெரிக்கா, ஒருவேளை ஈரான் தாக்குதல் மேற்கொண்டால், இஸ்ரேலுக்கு உதவியாக தாங்கள் களமிறங்குவோம் என்றும் எச்சரித்திருந்தது.

இதனிடையே, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு அடுத்த அறிவிப்பு வரும்வரையில் இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE