“ஈரான் - இஸ்ரேல் மோதலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” - இந்திய வெளியுறவு அமைச்சகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது என்றும் இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது கடந்த 1-ம்தேதி இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனிடையே இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. இஸ்ரேல் - ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும். பிராந்தியத்தில் பாதுகாப்பு பேணப்படுவது இன்றியமையாதது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல்- ஈரான் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து ஆலோசனை நடத்த ஐ.நா சபை அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது. இஸ்ரேல், ஈரான் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது போராக வெடித்தால் அப்பகுதி மக்களின் அமைதி சீர்குலையும் என்பதே உலக நாடுகளின் பயமாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE