ஆசியாவிலேயே பாகிஸ்தானில்தான் விலைவாசி அதிகம்: ஆசிய வளர்ச்சி வங்கி தரவுகள் சொல்வது என்ன?

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: 25 சதவீத பணவீக்கத்துடன், ஆசியாவிலேயே அன்றாட வாழ்வுக்கு அதிக பிடிக்கும் நாடாகவும், 1.9 சதவீதத்துடன் பிராந்தியத்தின் நான்காவது குறைவான பொருளாரா வளர்ச்சியுடைய நாடாகவும் பாகிஸ்தான் உள்ளது என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ‘பாகிஸ்தானில் அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 15 சதவீதமாக இருக்கும். பிராந்தியத்தில் உள்ள 46 நாடுகளைக் காட்டிலும் இது மிகவும் அதிகம். நாட்டின் கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதம் 2.8 சதவீதமாக இருக்கும். இது 2024-25 நிதியாண்டின் ஐந்தாவது மிகவும் குறைவான விகிதமாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மணிலாவை அடிப்படையாக கொண்ட கடன் வழங்கும் நிறுவனம் ஒன்று இந்த நிதியாண்டில் பாகிஸ்தானின் பணவீக்கம் 25 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. ஆசியாவிலேயே இது மிகவும் அதிகான ஒன்று. இதனால் ஆசியாவிலேயே வாழ்வதற்கான அதிக செலவு மிகுந்த நாடாக பாகிஸ்தானை மாற்றியுள்ளது. முன்னதாக, தெற்காசியாவில் அதிக செலவு பிடிக்கும் நாடாக பாகிஸ்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியும் (எஸ்பிபி), அந்நாட்டின் மத்திய அரசும் இந்த ஆண்டுக்கான பணவீக்க விகிதத்தை 21 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. என்றாலும், 22 சதவீத வட்டி விகிதத்தில் பெரும் இழப்பை அவர்கள் சந்தித்ததால் இந்த இலக்கை பாகிஸ்தானால் எட்ட இயலாது. இந்த நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதத்துடன் மியான்மர், அசர்பைஜான் மற்றும் நாவுருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் பாகிஸ்தான் இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார பிரச்சினைகளை பாக். தீர்க்க வேண்டும்: பாகிஸ்தான் நீண்ட காலமாக பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்து வருகிறது. பாகிஸ்தானில் மேலும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வீழ்வார்கள் என்று கடந்த வாரம் உலக வங்கி தெரிவித்தது. ஏற்கெனவே அந்நாட்டில் 98 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

புதிய வெளிநாட்டு நிதித் தேவை மற்றும் பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துதல், சர்வதேச நிதி நெருக்கடி போன்றவற்றால் பாகிஸ்தான் தொடர்ந்து சவால்களைச் சந்திக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் நிதியமைச்சர் முஹம்மது அவுரங்கசீப், அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜியோஜியாவாவைச் சந்தித்தித்து புதிய கடன் நிதிகளைக் கோர இருக்கிறார். ஐஎம்எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கூறுகையில், “இந்த வாரம் பாகிஸ்தானுடன் ஒரு சாத்தியமான பேச்சுவார்த்தை உள்ளது. என்றாலும், பாகிஸ்தானில் வரி தொடர்பாக தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

குறைவான நம்பிக்கை, அதிகரிக்கும் வாழ்வாதாரச் செலவு, ஐஎம்எஃபி திட்டங்களின் கீழ் உள்நாட்டு பொருளாதாரத்தில் திணிக்கப்படும் இறுக்கம் போன்றவை பாகிஸ்தானின் உள்நாட்டு தேவைகளை கட்டுப்படுத்தும். இந்த நிதியாண்டில் 4 சதவீதம் முதன்மை உபரியையும், ஜிடிபியில் 7.5 சதவீதம் பற்றாக்குறையை அடைவது அடுத்தடுத்த ஆண்டுகளில் இவற்றை படிப்படியாக குறைத்து வருவதே பாகிஸ்தான் இலக்கு என்று ஏடிபி கூறியுள்ளது. எனினும், பாகிஸ்தானால் இந்த பட்ஜெட் இலக்கை எட்ட முடியாது என்று உலக வங்கி கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE