ஆப்கனில் இந்துக்கள், சீக்கியர்களின் சொத்துகளை மீட்டு ஒப்படைக்கிறது தலிபான் அரசு!

By செய்திப்பிரிவு

காபூல்: தலிபான் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் சொத்துகளை மீட்டெடுக்கும் பணி தொடங்க உள்ளது. அதற்கான பணியை அந்த நாட்டில் நீதி அமைச்சகம் மேற்கொள்கிறது. தலிபான் அரசு இதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது தெரிவித்தனர். இந்தச் சூழலில் இந்த நடவடிக்கையை தலிபான் தலைமையிலான அரசு முன்னெடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பை வழங்கியுள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் நாடு திரும்ப வேண்டியது அவசியம். அந்த வகையில் முந்தைய ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்ட சொத்துகளை அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் வழங்கும் வகையில் நீதி அமைச்சகத்தின் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என தலிபானின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார். அந்த நாட்டின் சீக்கிய அரசியல் பிரமுகரும், ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான நரேந்தர் சிங் கல்சா நாடு திரும்பியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அவர் இந்தியா வந்தார். பின்னர் கனடாவில் அடைக்கலம் புகுந்தார். இந்தச் சூழலில் அவர் நாடு திரும்பியுள்ளார். புலம்பெயர்ந்த சிறுபான்மை இனத் தலைவர்கள் தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற வகையில் இது அமைந்துள்ளதாகவும். இது வரவேற்கத்தக்கது என ஆப்கானிஸ்தானை சேர்ந்த வர்ணனையாளர் சங்கர் பாய்கர் தெரிவித்துள்ளார். அவர் நெதர்லாந்தில் வசித்து வருகிறார்.

2018-ல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது நரேந்தர் சிங் கல்சாவின் தந்தை தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை ஐஎஸ்கேபி அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் படுகொலை செய்தனர்.

கடந்த 1970 மற்றும் 1980-களில் உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல் ரீதியான பிரிவினையால் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் புலம்பெயர தொடங்கினர். லட்சக் கணக்கில் இருந்த அவர்களின் எண்ணிக்கை அந்த நாட்டில் நூற்றுக் கணக்கில் மாறியது.

சிஏஏ: ஆப்கானிஸ்தான் (பாகிஸ்தான், வங்கதேசமும் இதில் அடங்கும்) நாட்டில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் வழிவகுப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE