“காலநிலை மாற்றம் பற்றி உங்களுக்குப் பாடம் எடுக்கவா?” - குதர்க்க கேள்விகளை தெறிக்கவிட்ட கயானா அதிபர்

By செய்திப்பிரிவு

புதிய எண்ணெய், எரிவாயுத் திட்டங்களால் கயானா நாடு கரியமில வாயு உமிழ்வை அதிகரிக்கும் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து குதர்க்கமாகக் கேள்வி கேட்ட செய்தி ஊடக நெறியாளரை சரமாரியாக கேள்விகளால் துளைத்து கவனம் ஈர்த்துள்ளார் அந்நாட்டு அதிபர் இர்ஃபான் அலி. இத்தகைய குற்றச்சாட்டுகள் மூன்றாம் உலக நாடுகள் மீதான மேற்கத்திய நாடுகளின் நயவஞ்சனை என்றும் அவர் சாடியுள்ளார்.

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ளது கயானா நாடு. கயானா நாட்டின் முதலாவது முஸ்லிம் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் இர்பான் அலி. இவர் கடந்த 2020 ஆகஸ்டில் அந்நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்றார். வெஸ்ட் கோஸ்ட் டெமார்ரா பகுதியில் 1980 ஏப்ரல் மாதம் பிறந்த இவர், இந்தோ - கயானிஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அண்மையில் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் அவர் கலந்து கொண்டார். அதிபர் இர்ஃபான் அலியிடம் ஆரம்பத்தில் இருந்தே நெறியாளர் குதர்க்கமாக கேள்விகள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அவருடைய கேள்விகளில் ஆங்காங்கே குறுக்கிட்டுப் பேசிய இர்ஃபான் அலி மூன்றாம் உலக நாடுகள் மீதான பார்வையை உடைக்கும் வகையில் தெறிக்கவிடும் பதில்களைக் கூறி கவனம் ஈர்த்துள்ளார்.

கேள்வி: கயானா அதன் கடற்கரைகளில் இருந்து எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் நாட்டின் கரியமில வாயு உமிழ்வு அதிகரிக்குமா?

பதில்: எங்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து பாடமெடுக்க அதிகாரம் இருக்கிறதா? தொழில் புரட்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை அழித்தவர்களின் பகுதியைச் சேர்ந்தவர்தானே நீங்கள். இப்போது அங்கிருப்பவர்கள் பாடமெடுக்கும் தகுதியைப் பெற்றுவிட்டார்களா!

கேள்வி: கயானாவில் எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டால் அதன்மூலம் 2 பில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வு நடைபெறும் என்று கூறப்படுகிறதே? அண்மையில் துபாயில் நடந்த COP28 காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கை தொடர்பான உச்சி மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டீர்களா?

பதில்: நீங்கள் அத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். கயானா நாட்டின் வனப்பரப்பளவு இங்கிலாந்து, ஸ்காட்லாந்தை இணைத்தால் எவ்வளவு வருமோ அந்த அளவுக்கு இருக்கும். அந்த வனம் 19.5 ஜிகா டன் கார்பனைக் கொண்டுள்ளது. நாங்கள் இன்னும் எங்களின் வனங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம்.

கேள்வி: அப்படியென்றால் நீங்கள் அங்கிருக்கும் கார்பன் முழுவதையும் பயன்படுத்தும் உரிமையைப் பெற்றுள்ளீர்கள் என நினைக்கிறீர்களா?

பதில்: காலநிலை மாற்றம் பற்றி நீங்கள் எங்களுக்குப் பாடம் எடுக்கும் உரிமையையும் எங்களின் வனங்களின் வளம் தான் உங்களுக்குக் கொடுக்கிறதோ!? நான் வேண்டுமானால் உங்களுக்கு அது தொடர்பாக பாடம் எடுக்கிறேன். எங்களின் உயிர்க் காடுகளில் 19.5 கிகா டன் கார்பன் உள்ளது. நீங்களும், இந்த உலகமும் அந்த இயற்கையின் பலனை அனுப்பவிக்கிறீர்கள்.

ஏனெனில், உலகளவில் கயானாவில் தான் மிகக் குறைந்த அளவில் வன அழிப்பு நிகழ்கிறது. எண்ணெய், இயற்கை எரிவாயுத் திட்டத்தை நாங்கள் இப்போது செயல்படுத்தினாலும் கூட எங்கள் நாட்டில் இருந்து வெளியேறும் கரியமில வாயுவின் அளவு நெட்-ஜீரோ, அதாவது பூஜ்ஜியம் என்றளவிலேயே இருக்கும். அந்தளவுக்கு நாங்கள் எங்கள் வனங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். எங்கள் மக்கள் அதனைச் செய்கிறார்கள். அதற்காக யாரும் எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை.

இந்த உலகம் கடந்த 50 ஆண்டுகளில் 65 சதவீத பல்லுயிர்ப் பரவலை இழந்துள்ளது. நாங்கள் எங்கள் நாட்டின் பல்லுயிர்ப் பரவலைப் பாதுகாத்துள்ளோம். நீங்கள் அதனை மதிக்கிறீர்களா? நீங்கள் அதற்காக செலவழிக்கத் தயாராக இருக்கிறீர்களா?

கரியமில வாயு உமிழ்வின் வாயிலாக ஏற்படும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் எப்போதுமே ஏன் விலை கொடுக்க வேண்டும். இது நயவஞ்சகம். நீங்கள் வனப் பாதுகாவலர்கள் பக்கமா அல்லது தொழில் புரட்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை சிதைத்தவர்கள் பக்கமா? ஒருவேளை எங்களிடம் இப்படிக் கேள்வி கேட்க அவர்கள் உங்களுக்குப் பணம் கொடுக்கிறார்களா?

இவ்வாறு கயானா அதிபர் அந்த நெறியாளரை சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த நேர்காணல் இணையத்தில் வேகமாகப் பரவி கவனம் பெற்றுள்ளது.

உலகளாவிய சராசரி வெப்பநிலை பற்றிய எதிர்காலக் கணிப்பு. தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, உலகளாவிய சராசரி வெப்பநிலை மிக அதிகமாக உயர்ந்துவிடக் கூடாது என்பதே காலநிலைச் செயல்பாடுகளின் முதன்மை இலக்கு. 2015-இல் பாரிஸில் நடைபெற்ற காலநிலை உச்சிமாநாட்டில், உலகளாவிய சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் போகாமல் இருக்க முயற்சிகள் எடுப்போம் என்று உலக நாடுகளிடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இது ‘பாரிஸ் ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டி அதிகரித்தால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதால், அந்த உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதையொட்டியே ஒவ்வொரு காலநிலை உச்சி மாநாட்டிலும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதை ஒட்டியே நெறியாளர், கயானா அரசின் திட்டங்கள் பற்றி கேள்வி எழுப்ப, அதனை அந்நாட்டு அதிபர் மேற்கத்திய நாடுகளின் நயவஞ்சனை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE