அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கிறது ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளி. இந்தப் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 15 வயது முன்னாள் மாணவன் நிக்கோலஸ் க்ரூஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக நடந்த இரங்கல் கூட்டத்தில் எம்மா கோன்ஸலஸ் என்ற 18 வயது மாணவி பேசிய பேச்சு, உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது. மிகவும் உணர்ச்சிகரமாகவும் ஆவேசமாகவும் பேசிய அந்த மாணவி, அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தையும், துப்பாக்கி கலாச்சாரத்தையும் வெளுத்து வாங்கினார். அதன் சுருக்கம்...
இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் வீட்டில் கூடி அழுது தீர்க்க வேண்டிய நேரம் இது. இருந்தாலும் நாம் இங்கு ஒன்றாக கூடியிருக்கிறோம். காரணம், நமது அரசிடம் இருந்தும் அதிபரிடம் இருந்தும் வெறும் அனுதாபமும் அஞ்சலியும்தான் வந்திருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்ட நாம்தான் மீண்டும் இதுபோல் நடக்காமல் இருக்க மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
புளோரிடாவில் துப்பாக்கி வாங்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. துப்பாக்கி உரிமமும் தேவையில்லை. அதை வாங்கிய பிறகு பதிவு செய்ய வேண்டியதும் இல்லை. எங்கும் எடுத்துச் செல்லலாம். யாரும் கேட்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் எத்தனை துப்பாக்கிகளையும் யார் வேண்டுமானாலும் வாங்க முடியும். இதுதான் நிலைமை.
இதே பள்ளியில் துப்பாக்கி கலாச்சாரத்தைப் பற்றி பலமுறை கூடி விவாதம் நடத்தியிருக்கிறார்கள். தற்போது துப்பாக்கிச் சூடு நடந்த போதும், மாணவர்கள் டெஸ்குக்கு அடியில் உயிருக்குப் பயந்து ஒளிந்திருந்தபோதும், இந்த விவாதம் நடந்திருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் 1000 முறை விவாதம் நடந்திருக்கிறது. ஆனால் முதல்முறையாக அந்த அனுபவம் எவ்வளவு மோசமானது என்று இந்த துப்பாக்கிச் சூட்டின்போது பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்.
ஆஸ்திரேலியாவில் கடந்த 1999-ம் ஆண்டு போர்ட் ஆர்தரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. உடனே துப்பாக்கி கட்டுபாட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு அங்கு துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை. ஜப்பானில் துப்பாக்கிச்சூடு நடந்ததே இல்லை. கனடாவில் 3 முறையும் இங்கிலாந்தில் ஒரு முறையும் நடந்தது. இரு நாடுகளும் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இங்கு இன்னமும் துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருக்கிறது. அரசு இப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாணவர்கள் தொடர்ந்து தோட்டாவுக்கு பலியாக வேண்டியதுதான்.
எங்களைப் பற்றி இனி பாடப் புத்தகங்களில் படிப்பீர்கள். துப்பாக்கிச்சூடு நடந்த பள்ளி என்பதற்காக இல்லை. அது நடந்த கடைசிப் பள்ளி என்பதற்காக. மாணவர்களாகிய நாங்கள் சட்டத்தை மாற்றப் போகிறோம். எங்கள் பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் பெற்றோரும் அதற்காக விடாமுயற்சி மேற்கொள்வோம். இறந்துபோன மாணவர்களும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களும், பயத்தால் மிரண்டுபோய் மனநலம் பாதித்த மாணவர்களும், 24 மணி நேரமும் ஹெலிகாப்டர் பள்ளி வளாகத்தைச் சுற்றி வருவதால் பயத்தில் இருக்கும் மாணவர்களும் துணைநிற்போம்.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மாணவர் மனநலம் பாதித்தவர்.. மோசமான நடத்தைக்காக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டவர். அவர் பிரச்சினைக்கு உரியவர் என அக்கம்பக்கத்தினருக்கும், வகுப்புத் தோழர்களுக்கும் தெரியும். அவருக்கு துப்பாக்கி சுடத் தெரியும் என்பதும் பலருக்கு தெரிந்திருக்கிறது. அவரை நாம் ஒதுக்கிவைத்திருக்கக் கூடாது என பலர் பேசுகிறார்கள். உங்களுக்கு அந்த மாணவரைப் பற்றித் தெரியாது. எங்களுக்குத் தெரியும். அவருக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதுவும் எங்களுக்குத் தெரியும். பிரச்சினை அதுவல்ல. அவர் கையில் கத்தி இருந்திருந்தால் இத்தனை பேர் இறந்திருக்க மாட்டார்கள். துப்பாக்கி இருந்ததால்தானே இத்தனை பேர் பலியாகி இருக்கிறார்கள். அதுதான் பிரச்சினை.
இந்த நிலைக்கு அந்த மாணவர் காரணம். அவன் துப்பாக்கி வாங்க அனுமதித்த பெற்றோர் காரணம். சாதாரண துப்பாக்கியை தானியங்கி துப்பாக்கியாக மாற்றத் தேவையான உதிரிபாகங்களை வாங்குவதற்கு அனுமதித்தவர்கள் காரணம். அவனுக்கு மனநிலை சரியில்லை எனத் தெரிந்தும் அவனிடம் இருந்து துப்பாக்கியை பறிக்காதவர்கள் காரணம். நான் எப்பிஐ-யை சொல்லவில்லை. அவனுடன் வாழ்ந்த பெற்றோரைச் சொல்கிறேன். துப்பாக்கியும் கையுமாக வீட்டுக்கு வெளியே திரிந்தபோது, அதைப் பார்த்தும் சும்மா இருந்த அக்கம்பக்கத்தினரை சொல்கிறேன்.
அதிபர் ட்ரம்ப் நேரில் வந்து என்னிடம், ``இது மிகவும் துயரமான சம்பவம், இனிமேல் இதுபோல் நடக்காது..'' என சொல்ல விரும்பினால், அவரிடம் நான் ஒன்றை கேட்பேன். ``தேசிய துப்பாக்கி கழகத்திடம் (National Rifle Association) இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்..?'' எனக் கேட்பேன். அவர் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அது எனக்கே தெரியும். 3 கோடி டாலர்கள். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் துப்பாக்கிச்சூடுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், ஒருவருக்கு 5,800 டாலர் வருகிறது. ஒருவரின் உயிரின் மதிப்பு அவ்வளவுதானா மிஸ்டர் ட்ரம்ப்? இப்போதாவது நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் மேலும் பலர் இறந்து உயிரின் மதிப்பு இன்னமும் குறைந்துவிடப் போகிறது.
தேசிய துப்பாக்கி கழகத்திடம் நன்கொடை வாங்கும் ஒவ்வொரு அரசியல்வாதியையும் கேட்கிறேன். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் வாங்கிய பணம் உறுத்தவில்லையா? அப்படி உறுத்தினால் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இந்த ஒருமுறையாவது நல்லது செய்ய முன்வாருங்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். என்ன செய்யக் கூடாது என்பதற்கு என்னிடமே ஒரு உதாரணம் இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில், சரியாக ஓராண்டு முன்பு, ஒபாமா ஆட்சிக் காலத்தில் அமலில் இருந்த சட்டத்தை, மனநலம் பாதித்தவர்கள் துப்பாக்கி வாங்குவதை தடை செய்யும் சட்டத்தை அதிபர் ட்ரம்ப் மாற்றினார். இதை அவர் செய்யாமல் இருந்திருந்தால், இத்தனை உயிர் போயிருந்திருக்காது.
லோவா மாகாண ரிபப்ளிக்கன் கட்சியைச் சேர்ந்த செனட்டர் சக் கிராஸ்லேதான் அந்த திருத்த மசோதாவைக் கொண்டு வந்தவர். அந்த சட்டத்தால்தான் எப்பிஐ அந்த மாணவனின் பின் னணி குறித்து விசாரிக்க முடியவில்லை. இப்போது அதே செனட் டர் சொல்கிறார், எப்பிஐ அந்த மாணவன் குறித்து விசாரித்திருக்க வேண்டும் என்று. அய்யா.. நீங்கதான் அதற்கு வேலையே இல்லாமல் செய்து விட்டீர்களே..
சொகுசு நாற்காலியில் அமர்ந்து வேலை பார்க்கும் நம் செனட்டர்களும் எம்.பிக்களும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியாது என்கிறார்கள். இது அபத்தம். கடுமையான விதிமுறைகளால் வன்முறை குறையாது என்கிறார்கள். இது அபத்தம். நல்லவனின் கையில் இருக்கும் துப்பாக்கி, கெட்டவனின் துப்பாக்கியை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்கிறார்கள். இதுவும் அபத்தம். கார்களும் ஆபத்தானவைதான்.. அதற்காக தடை செய்ய முடியுமா என்கிறார்கள். இது சுத்த அபத்தம். எந்த சட்டத்தாலும் எந்த வன்முறையையும் தடுக்க முடியாது என்கிறார்கள். இதுவும் அபத்தம்.
இவ்வாறு அந்த மாணவி பேசினார். இந்தப் பேச்சு உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
3 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago