‘அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் கவனத்துக்கு...’ - இந்திரா நூயி ‘வார்னிங்’ உடன் அறிவுரை

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக வன்முறைத் தாக்குதல்களில் உயிரிழப்பது அதிகரித்துள்ள நிலையில், பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்திரா நூயி இந்திய மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். “கவனமாக இருங்கள். உள்ளூர் சட்டங்களை மதித்து நடங்கள். போதை வஸ்துக்கள் பயன்படுத்தாதீர்கள். அளவுக்கு அதிகமாக குடிக்காதீர்கள். இவற்றைச் செய்தால் இந்த நாட்டில் நீங்கள் உங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

இந்தக் கருத்துகளை ஒரு வீடியோவாகப் பதிவு செய்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 10 நிமிடங்களுக்கு மேல் ஓடும் அந்த வீடியோவில் இந்திரா நூயி பேசியது: “கவனமாக இருங்கள். உள்ளூர் சட்டங்களை மதித்து நடங்கள். போதை வஸ்துக்கள் பயன்படுத்தாதீர்கள். அளவுக்கு அதிகமாக குடிக்காதீர்கள். இவற்றைச் செய்தால் இந்த நாட்டில் நீங்கள் உங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.

நான் எதற்காக இந்த வீடியோ மூலம் உங்களிடம் பேசுகிறேன் என்றால் சமீபகாலமாக நான் இந்திய மாணவர்களுக்கு நேர்ந்த சோக முடிவு சம்பந்தமாக நிறைய செய்திகள் படித்துவிட்டேன். அதனாலேயே ஏற்கெனவே இங்கே பயிலும் இந்திய மாணவர்கள் மற்றும் அமெரிக்காவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் நலனுக்காக இதனை வெளியிடுகிறேன்.

உங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக அமைத்துக் கொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இரவில் ஆள் அரவமற்றப் பகுதிகளுக்கு தனியாக செல்லாதீர்கள். போதை வேண்டாம். அதிக மதுவும் வேண்டாம். இவைதான் பேரழிவுக்கான சூத்திரம். அதேபோல் அமெரிக்கா வர விரும்பும் மாணவர்கள் நீங்கள் படிக்க வேண்டிய பல்கலைக்கழகத்தைக் கவனமாக தேர்ந்தெடுங்கள். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதலில் கலாச்சார ரீதியாக பெரிய மாற்றத்தை எதிகொள்ள வேண்டியிருக்கும்.

நீங்கள் அமெரிக்காவில் கல்வி பயில வந்தால் முதல் சில மாதங்கள் மிகவும் கவனமாக இருங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் குறித்து மிகவும் கவனமாக இருங்கள். உங்களுக்கு அறிமுகமாகும் புதிய பழக்கங்கள், கலாச்சார மாற்றங்கள் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள்.

புதிதாக மிகப் பெரிய அளவில் சுதந்திரம் கிடைக்கும் போது எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். இந்திய மாணவர்கள் பொதுவாகவே கடுமையான உழைப்பாளிகள் என்றாலும் சில நேரங்களில் சிலர் சும்மா செய்து பார்க்கிறோம் என்று இறங்கி பின்னர் ஃபெடானில் போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.

ஃபெடானில் மிகவும் ஆபத்தானது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன் மிக மிக ஆபத்தானது. அது மன நலத்திலும் உடல் நலத்திலும் அதீத பாதிப்புகளை ஏற்படுத்தும். உங்கள் எதிர்காலமே சிதைந்துவிடும். தயவுசெய்து போதை வஸ்துக்களை சும்மா கூட தொடாதீர்கள். மிக முக்கியமாக சட்டவிரோத நடவடிக்கைகள் என பட்டியலிட்டப்பட்ட எதிலும் ஈடுபடாதீர்கள். சட்டத்தை தெரிந்துகொண்டு சட்டத்துக்கு உட்பட்டு வாழுங்கள். ஓர் அந்நிய தேசத்தில் இருக்கும்போது நீங்கள் செய்யும் ஒரு செயலால் ஏற்படும் விளைவுகளை அறிந்து எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

உங்கள் விசாவின் அந்தஸ்தை தெரிந்து கொள்ளுங்கள். பகுதி நேர வேலைக்கு அதில் அனுமதி இருந்தால் செய்யுங்கள். சட்டத்தை மீறாதீர்கள். ஒரு வெளிநாட்டு மாணவர் அமெரிக்காவில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வெளியே செல்லும்போது குழுவாகச் செல்லுங்கள். தனியாகச் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள். பின்னிரவில் வெளியே செல்லாதீர்கள். ஆள் அரவமற்ற இடத்துக்குச் செல்லாதீர்கள். இருள் சூழ்ந்த இடத்துக்குச் செல்லாதீர்கள்” என்று மாணவர்களுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.

இதுவரை 9 பேர் உயிரிழப்பு: அமெரிக்காவில் நடப்பாண்டில் இதுவரை இந்தியாவை சேர்ந்தவர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய மாணவர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில்ம் இந்திய மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் வழங்கியுள்ளனர் எனத் தெரிகிறது.

இந்நிலையில்தான் இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த சென்னையில் பள்ளி பயின்ற பெப்சிகோ முன்னாள் சிஇஓ இந்திரா நூயி வீடியோ மூலம் அமெரிக்காவில் உள்ள மற்றும் அமெரிக்கா வர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு தனது அறிவுரையைப் பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

16 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்