தீவிரவாதிகளுக்கு தடை விதிப்பதை தடுக்கும் ‘வீட்டோ' அதிகார நாடுகள்: ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா விமர்சனம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தீவிரவாதிகளின் பட்டியலை வெளியிடுவதை தடுப்பதாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக, மும்பையில் நடைபெற்ற 26/11 தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கும்படி இந்தியாவும் அமெரிக்காவும் ஐநா பாதுகாப்பு சபையில் முன்மொழிந்தன. மும்பை தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், 300 பேர் படுகாயம் அடைந்தனர்.

இத்தகைய தீவிரவாத சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவரை தீவிரவாதி என்று அறிவிக்க விடாமல் சீனா சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐநா கூட்டத்தில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது. இது சம்பந்தமான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தது. ஐநாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இதுகுறித்து ஐநா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் நேற்று கூறிய தாவது: உலகளவில் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களின் பட்டியலைக்கூட ஐநாவின் வீட்டோ அதிகாரம் பெற்றநாடுகள் வெளியிட மறுத்து வருகின்றன. இவ்வாறு வீட்டோ நாடுகள் செயல்படுவது என்பது தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்துவதென்று இந்த சபை ஏற்றிருக்கும் கொள்கைக்கு விரோதமானது. ஐநா சபை இரட்டை நிலைப்பாடு எடுப்பதற்கு இது சமமாகும்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ஐநா சபையில் நிறைவேற்றப்படும் முடிவுகள் சார்ந்த கூட்டங்களில் உறுப்பு நாடுகளுக்கு இடையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். ஐநா.வுக்கு பெரும் எண்ணிக்கையிலான அமைதிப்படை வீரர்களை அனுப்பிவரும் நாடு என்கிற முறையில், இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்.

21-ம் நூற்றாண்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்த சபை செயல்பட அவசியமான சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க அனைத்து வீட்டோ நாடுகளும்முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE