உக்ரைனுக்கு எதிராக போரிட கட்டாயப்படுத்துகின்றனர்: ரஷ்ய ராணுவத்திடம் இருந்து மீட்குமாறு 7 இந்தியர்கள் கதறல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகபோர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுற்றுலா சென்று உக்ரைனில் சிக்கியுள்ள 7 இந்தியர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் இந்தியர்கள் கூறியிருப்பதாவது: கடந்தஆண்டு டிசம்பர் 27-ம் தேதி புத்தாண்டை கொண்டாட ரஷ்யாவுக்குசுற்றுலா வந்தோம். பின்னர் ஒருஏஜெண்ட் மூலம் பெலாரஸ் சென்றோம். ஆனால், விசாவுடன்தான் செல்ல வேண்டுமென்று தெரியாது. எங்களை நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டு அந்த ஏஜெண்ட் ஓடிவிட்டார்.

போலீஸார் எங்களைப் பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டனர். அவர்கள் கொடுத்த ஆவணங்களில் வேறு வழி இல்லாததால் கையெழுத்து போட்டோம். பின்னர், எங்களை ராணுவப் பயிற்சி மையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர்தான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. அது போர்ப் பயிற்சியை வழங்கும் மையம். துப்பாக்கியால் சுடுதல் போன்ற பயிற்சி அங்கு வழங்கப்பட்டது. எங்களை ராணுவத்தில் சேர்த்து பயிற்சி தந்தனர்.

பயிற்சி முடிந்த பின்னர் உக்ரைன் எல்லையில் எங்களை இறக்கிவிட்டு துப்பாக்கியுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். நாங்கள் போருக்குத் தயாராகவில்லை. மேலும் துப்பாக்கிகளை பிடிக்கவே எங்களால் முடியவில்லை. எங்களைக் காப்பாற்றுங்கள். எங்களை மீட்க இந்திய அரசும், தூதரகமும் எங்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த வீடியோவில் தெரிவித் துள்ளனர்.

இதையடுத்து இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியர் உயிரிழப்பு: ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பன் என தெரியவந்துள்ளது.

இதை உறுதிப்படுத்தி உள்ள இந்திய தூதரகம், இது தொடர்பாக அஸ்பன் குடும்பத்தினருடனும் ரஷ்ய அதிகாரிகளுடனும் பேசி வருவதாக தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE