பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு - நாளை பதவியேற்கிறார்

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டணி அரசாங்கத்தை வழி நடத்த ஷெபாஸ் ஷெரீப் 2-வது முறையாக நாட்டின் பிரதமராக தேர்வாகியுள்ளார். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேசிய சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவுடன் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 உறுப்பினர்களில் பிரதமராக 169 உறுப்பினர்கள் ஆதரவு போதும் என்ற நிலையில் ஷெபாஸ் 201 வாக்குகள் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளார். இம்ரான் கான் ஆதரவு பெற்ற ஒமர் ஆயுப் கான் 92 வாக்குகள் பெற்றார். முன்னதாக, ஷெரீப் முன்மொழிந்த அயாஸ் சாதிக், நாடாளுமன்ற சபாநாயகராக வெள்ளிக்கிழமைத் தேர்வு செய்யப்பட்டார். ஷெபாஸ் ஷெரீப், குடியரசுத் தலைவர் மாளிகையான ஐவான்-இ-சதரில் திங்கள்கிழமை பதவி ஏற்றுக்கொள்கிறார்.

யார் இந்த ஷெபாஸ் ஷெரீப்: பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் ஷெரீப் குடும்பத்தில் 1951ம் ஆண்டு செப்.23-ம் தேதி பஞ்சாபின் லாகூரில் ஷெபாஸ் ஷெரீப் பிறந்தார். இவர் பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீபின் மூன்றாவது தம்பியாவார். லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் கல்வி பெற்ற ஷெபாஸ், பஞ்சாப் பல்கலையில் வழங்கறிஞர் பட்டம் பெற்றார். கடந்த 1980 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த இவர், தந்தை மற்றும் அண்ணனால் தொடங்கப்பட்ட பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியில் படிப்படியாக வளர்ச்சியடைந்தார். பாகிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான பஞ்சாப்பின் முதல்வராக பல முறை பதவி வகித்துள்ளார். தனது திறமையான நிர்வாகத்துக்காக புகழப்பட்டார்.

கடந்த 2022ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பின்பு 16 மாதங்களுக்கு பல்வேறு கட்சிகளின் கூட்டணியை நிர்வகிப்பதில் முக்கிய பங்காற்றினார். இதே கூட்டணியால் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்டதும் தனது அண்ணனும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சித் தலைவருமான நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் இல்லாத நிலையில், கடந்த 2022ம் ஆண்டு முதல்முறையாக ஷெபாஸ் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்காக காபந்து அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு 16 மாதங்கள் பிரதமராக இருந்தார். தான் பிரதமராக பதவி வகித்த 16 மாதங்களில் கடனைத் திருப்பி செலுத்துவதைத் தடுப்பதற்கான முன்னணி முயற்சிகளில் ரூ.3 பில்லியன் கடன் திட்டத்தைப் பெற்றார். எரிசக்தி விலை உயர்த்துதல், மானியங்களை ரத்து செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைளை மேற்கொண்டார்.

நிச்சயமற்ற கூட்டணி: நாடு கடத்தப்பட்டிருந்த நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு திரும்பிய நிலையில், ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டது ஆச்சரியமானதே. பிரதமர் பதவிக்கான வாக்குப்பதிவில் ஷெபாஸுக்கு அவரது அண்ணன் நவாஸ் ஷெரீப் முதல் வாக்கினை அளித்தார். இதுகுறித்து நவாஸ் ஷெரீப் தனது தோல்வியை மனதார ஏற்றுக்கொண்டிக்கலாம் என்று பிடிஐ விமர்சித்துள்ளது. ஷெபாஸ் ஷெரீபுக்கு பிபிபி, எம்க்யூஎம்-பி, பிஎம்எல் (க்யூ), பலுசிஸ்தான் அவாமி கட்சி, பிஎம்எல் (இசட்), இஸ்தேகாம் -இ- பாகிஸ்தான் கட்சி, தேசிய கட்சி ஆகியவை ஆதரவளித்தன.

காத்திருக்கும் சாவல்கள்: வரும் காலத்தில் 24 கோடி மக்கள் வாழும் தேசத்தில் ஒன்றொடு ஒன்று பிணைந்துள்ள பிரச்சினைகளை ஷெபாஸ் ஷெரீப் எதிர்கொள்ள உள்ளார். ஷெபாஸ் ஷெரீபின் முதல் பதவி காலத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம் விளிம்பு நிலையில் தத்தளித்தது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது. கடுமையான பணவீக்கத்துடன் நாடு தொடர்ந்து போராடி வரும் நிலையில், மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஷெபாஸ் ஷெரீப் அரசு முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக பாதுகாப்பு அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. 2021ல் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி பதவி ஏற்றதில் இருந்து பாகிஸ்தான் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE