உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் எனும் தகுதியை ஜெர்மனியிடம் இழந்தது ஜப்பான்!

By செய்திப்பிரிவு

டோக்கியோ: உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக விளங்கிய ஜப்பான், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக தனது அந்த நிலையை ஜெர்மனியிடம் இழந்துள்ளது.

உலகின் முதல் மிகப் பெரிய பொருளாதாரமாக அமெரிக்காவும், இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீனாவும் உள்ளன. மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஜப்பானும், நான்காவது பெரிய பொருளாதாரமாக ஜெர்மனியும் இருந்தன. இந்நிலையில், ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக 3-வது இடத்தை ஜப்பான் இழந்துள்ளது.

ஜப்பான் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் ஜப்பானின் பொருளாதாரம் சுருங்கியுள்ளது. மூன்றாம் காலாண்டில் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3 சதவீதமாக சுருங்கியுள்ளது. ஆண்டு சராசரியாக 0.4 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ல், ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 591.48 டிரில்லியன் யென் (4.2 டிரில்லியன் டாலர்) ஆக உள்ளது. சராசரி வளர்ச்சி 5.7 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம் ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது 4.12 டிரில்லியன் யூரோக்கள் (4.46 டிரில்லியன் டாலர்) ஆக உள்ளது.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக அந்நாட்டில் உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து, அவற்றின் நுகர்வு 0.2 சதவீதம் குறைந்துள்ளது. ஜப்பானின் எரிபொருள் தேவையில் 94 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதேபோல், உணவுத் தேவையில் 63 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் நுகர்வு குறைந்துள்ளதோடு, இறக்குமதிக்கான செலவு கூடி இருப்பதன் காரணமாக பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுவதாக டோக்கியோவை தலைமையிடமாகக் கொண்ட ஜப்பான் மேக்ரோ எனும் உத்திகளை வகுக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் கடந்த ஜனவரியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதன் பொருளாதார மந்தநிலைக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ள நியூமேன் நிறுவனம், இயற்கை பேரிடர் காரணமாக மக்கள் செலவு செய்வதை நிறுத்திக்கொண்டார்கள் என கூறியுள்ளது. தனிநபர்களின் நுகர்வு குறைந்துள்ளதோடு, சந்தை எதிர்பார்ப்பும் தட்டையாகவே உள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE