“எலான் மஸ்க் ஒரு புத்திசாலி” - ரஷ்ய அதிபர் புதின் பாராட்டியதன் பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் புதின் ஒரு நேர்காணலின்போது டெஸ்லா நிறுவனரும், உலக கோடீஸ்வரருமான எலான் மஸ்கை ‘புத்திசாலி’ எனப் பாராட்டியுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின், பிரபல தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன் நடத்திய ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில் பங்கேற்ற புதினிடம், டக்கர் கார்ல்சன் பல்வேறு கேள்விகளைக் கேட்டார். உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து பேசிய புதின், “ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது. ஆனால், போலந்து மற்றும் லாட்வியா போன்ற அண்டை நாடுகளுக்கு போரை விரிவுபடுத்த விரும்பவில்லை” என்றார்.

பின்னர் ஏஐ மற்றும் நியூராலிங்க் பற்றி கேள்வி கேட்டபோது, “மனிதகுலம் தற்போது பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. மரபணு ஆராய்ச்சியாளர்களால் தற்போது ஒரு மனிதநேயமற்ற மனிதன், ஒரு விளையாட்டு வீரர், விஞ்ஞானி மற்றும் ராணுவ மனிதன் என பல்வேறு நபர்களை உருவாக்க முடியும்” என்றார்.

அதன் பிறகு ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்துவது தொடர்பாக புதினிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அப்போது அவர், “எலான் மஸ்கை நிறுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் எதை அடைய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அவரின் கண்டுபிடிப்புகள், சிந்தனைகள் பற்றி நாம் அறிவு சார்ந்த கேள்விகளைதொடர்ந்து எழுப்பினால்தான், அவருடைய கண்டுபிடிப்புகள் இன்னும் மேம்பட்டதாக அமையும்.

அறிவு சார்ந்த கேள்விகள் வழியாக அவருடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தினால் மட்டுமே அவரின் வேகத்தை குறைக்க முடியும். மூளையில் சிப் வைக்கும் இந்த ஆய்வு முழுமை பெற்ற பிறகே அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார். எலன் மஸ்க் இந்த நேர்காணலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

நியூராலிங்க் நிறுவனம் தான் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை தொடங்கியுள்ளது. இதனை எலான் மஸ்க் சில தினங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இது மருத்துவத்தில் ஒரு மைல் கல் என்பது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > பேசாமல் பேசும் திறன்: எலான் மஸ்க் திட்டம் என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE