இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்

By செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு (75) கடந்த மாதம் புரோஸ்டேட் (முன்னிலைச் சுரப்பி)வீக்கம் ஏற்பட்டது. சிறுநீர்க் குழாயின் அடிப்பகுதியில் இருக்கும் இந்த சுரப்பியில் இருந்து வெளியேறும் திரவம்தான், விந்தணுக்களை எடுத்துச் செல்கிறது. இந்த சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டால், அது சிறுநீர் பாதையை சுருக்கி, சிறுநீர் வெளியேற்றத்தை தடுக்கும்.

இந்த சிகிச்சைக்காக இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த மாதம் 17-ம் தேதிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து கடந்த மாதம் 29-ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த சிகிச்சையின்போது, அவருக்கு புற்று நோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அது தற்போது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் என்ன வகையான புற்றுநோய் என தெரிவிக்கப்படவில்லை.

இது குறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், ‘‘மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்று நோய்க்கான அறிகுறிகள் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சையை மன்னர்சார்லஸ் தொடங்கியுள்ளார். அதனால் பொது நிகழ்ச்சிகளை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சிகிச்சைகாலத்தில், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் பணிகளை மட்டும் அவர் தொடர்ந்து மேற்கொள்வார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட உலகத் தலைவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE