ஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை

By செய்திப்பிரிவு

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தோஷாகானா வழக்கில் இருவருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த தம்பதி 10 ஆண்டுகளுக்கு பொது பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவருக்கும் ரூ.787 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மறுநாள் இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். அந்நாட்டின் ராணுவ ஆதரவை இழந்தபின், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கான் கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக ஏற்பட்ட வன்முறையை தடுக்க, அவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி மூத்த தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது கட்சியின் சின்னமும் முடக்கப்பட்டது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார். அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டு, அடுத்த மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இம்ரான் கான் தற்போது அடியலா சிறையில் உள்ளார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில், அவர் மீது ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிட்டதாக அவர் மீதும் பிடிஐ கட்சியின் துணைத் தலைவராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்த ஷா மெகமூத் குரேஷி மீதும் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ) தொடர்ந்த வழக்கில் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்