மாலத்தீவு நாடாளுமன்றத்தில் அடிதடி; அதிபருக்கு எதிராக தீர்மானமா? - சிக்கலும் பின்புலமும்

By நிவேதா தனிமொழி

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி ஐசா(ISA), தேசிய மக்கள் காங்கிரஸ் எம்.பி அப்துல்லா ஷாஹீம் ஆகியோர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அவைத் தலைவர் இருக்கைக்கு எதிரே அடித்துக்கொள்ளும் வீடியோ வைரலானது.

அதன் பின்னணி என்ன?: கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, தனது லட்சத்தீவு பயணத்தைக் குறிப்பிட்டு ”லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்காக நன்றி கூறுகிறேன்” என தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரதமரின் இந்தக் கருத்துக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் சில கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக, இந்தியா மாலத்தீவைக் குறிவைக்கிறது என்றும், மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது எனக் குற்றம்சாட்டியிருந்தனர். இது இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்பத்தியது. இதனால், பலரும் மாலத்தீவுக்கு எதிரான பிரச்சாரங்களைச் சமூக வலைதளங்களில் முன்வைத்தனர். மாலத்தீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவைக் குறிப்பிட்டனர். இதனால், பலர் தங்களின் மாலத்தீவு பயணத்தையும் ரத்து செய்தனர்.

இந்த நிலையில், இந்திய சுற்றுலா பயணிகள் வருகை மாலத்தீவில் கடுமையாக சரிந்துள்ளது. மாலத்தீவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் முதலிடத்தில் ரஷ்யாவும், 2-வது இடத்தில் இத்தாலியும், 3-வது இடத்தில் சீனாவும், 4-வது இடத்தில் பிரிட்டனும், 5-வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்தது. மேலும், மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு, அரசுமுறை பயணமாக சீன நாட்டிற்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி, இந்தியா - மாலத்தீவு இடையே உரசல்போக்கு தொடரும் நிலையில், சீனாவுடன் இணைப்பைப் பலப்படுத்த மாலத்தீவு அதிபர் பல்வேறு வியூகங்களை வகுத்தார். இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதன் அங்கமாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, அந்நாட்டு அதிபர் முய்சு காலக்கெடு விதித்துள்ளார்.

’மாலத்தீவு அதிபர் இந்தியாவுடன் விரோத போக்கை கடைபிடிப்பதற்கு சீனாதான் காரணம்’ என அந்நாட்டு எதிர்க்கட்சிகளே விமர்சனம் செய்து வருகின்றன. மேலும் அதிபர் முகமது முய்சுவின் நடவடிக்கையால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர் என குற்றச்சாட்டு வைக்கும் எதிர்க்கட்சிகள் அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், அதிபர் முய்சு அமைச்சரவையில் 4 பேரை அமைச்சர்களாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் பெறுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. எனினும் அந்தப் பரிந்துரைக்கு பிரதான எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயக கட்சி (எம்டிபி), ஜனநாயகவாதிகள் கட்சியினர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என முடிவு செய்தனர்.

இதற்காக நடைபெற்ற கூட்டத்திற்கு வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்களை ஆளும் கட்சி எம்.பி.க்கள் அவைக்குள் வரவிடாமல் தடுத்தனர். சில எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷம் இட்டனர். அப்போது எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியின் எம்பி ஐசா (ISA), ஆளும் தேசிய மக்கள் காங்கிரஸ் எம்.பி அப்துல்லா ஷாஹீம் ஆகியோர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து எம்.பி.க்கள் அடி உதையில் இறங்கியதுடன் தலை முடியை பிடித்து அடித்து கொண்டனர். இதில் காயமடைந்த ஷாஹீம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர்கள் அலி இஹுசன், முகமது கசன் மவுமூன் உள்ளிட்ட 4 அமைச்சர்களின் நியமனத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று எம்டிபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக பதவி நீக்கத்தீர்மானத்தை எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி (எம்டிபி) உறுப்பினர்கள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட 34 எம்.பி.க்களிடம் கையெழுத்திட்ட கடிதத்தைப் பெறவும் அவர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எப்படி அதிபர் முகமது முய்சு சமாளிக்கப் போகிறார் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE