சர்வதேச மாணவர் விசாக்களுக்கு 2 வருட வரம்பை அறிவித்த கனடா - இந்திய மாணவர்களுக்கு சிக்கல்!

By செய்திப்பிரிவு

ஒட்டாவா: கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா காலம் இரண்டு வருடங்களாக கனடா அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது. இதனால், இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு நிலவுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், "கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி விசாக்கள் வழங்கப்பட்டன. 2023-ம் ஆண்டு கிட்டத்தட்ட 5.60 லட்சம் மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஏற்றுக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையைவிட இது மூன்று மடங்கு அதிகம்.

எனவே, கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 35 சதவீதம் அளவுக்கு மாணவர் விசாக்களை குறைக்க முடிவெடுத்துள்ளோம். இதன்மூலம், நடப்பாண்டில் 3.64 லட்சம் மாணவர் விசாக்கள் மட்டுமே வழங்கப்படும். இந்த வரம்பு இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

இந்த ஆண்டின் இறுதியில் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, மாணவர் விசாக்களின் அதிகபட்ச எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு வெளியிடப்படும். கனடாவில் தங்குவதற்கு வீடுகள் கிடைப்பதில் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். கனடா வரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதே இந்த பிரச்சினைக்குக் காரணம். இதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து கனடா வரும் மாணவர்கள் தங்குவதற்கு பல்வேறு மாகாணங்களில் போதுமான வீடுகள் இல்லை என்பதால், அந்த மாகாணங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த மாகாணங்களின் வலியுறுத்தல் காரணமாகவே கனடா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் அந்நாட்டின் செய்தி நிறுவனம் சிபிசி தெரிவித்துள்ளது.

கனடா அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது என தெரிவித்த மார்க் மில்லர், "போதுமான அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்டிருக்காத நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு மாணவர்களை தங்கள் கல்வி நிறுவனங்களில் சேர்க்கின்றன. தங்கள் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால் கனடாவில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும், நிரந்தர கனடா வாசியாக மாற முடியும் என்றெல்லாம் அவை போலியான வாக்குறுதிகளை அளிக்கின்றன. எனவே, இதைக் கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு எந்த ஒரு சர்வதேச மாணவருக்கும் எதிரானது அல்ல" என கூறினார்.

கனடாவின் எதிர்க்கட்சி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான ஜென்னி க்வான், "அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவின் தவறான நிர்வாகமே இதற்குக் காரணம். சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள விரும்பும் மாணவர்களை தண்டிப்பதைப் போன்ற செயல் இது" என தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு: கனடா அரசின் இந்த அறிவிப்பு காரணமாக இந்திய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கனடா அரசு கல்வி விசா அளிக்கும் நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எனவே, வரும் காலங்களில் கனடாவுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவர்களில் பலருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE