ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இல்லாமல் இருப்பது அபத்தம்: எலான் மஸ்க்

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது என்று உலகின் மிகப் பெரிய பணக்காரரும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு கட்டத்தில் ஐநா அமைப்புகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரச்சினை என்னவென்றால், அதிகப்படியான அதிகாரம் உள்ளவர்கள் அதை விட்டுவிட விரும்பவில்லை. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும், ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது. ஆப்ரிக்காவுக்கும் கூட்டாக நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஐநா பொதுச் செயலாளர் அந்தோணி குத்தேரஸ், "ஐநா பாதுகாப்பு அவையில் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் நிரந்தர உறுப்பினர் இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? நிறுவனங்கள் இன்றைய உலகத்தை பிரதிபலிக்க வேண்டும், 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை அல்ல. செப்டம்பரின் எதிர்கால உச்சி மாநாடு, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களை பரிசீலிக்க மற்றும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்பாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியாவை அறிவிக்க வேண்டும் என இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ஆவதை தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் சீனா தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஐநா பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பு நாடாக இந்தியா 8 முறை தேர்வு செய்யப்பட்டு 16 ஆண்டு காலம் இருந்துள்ளது.

இது தொடர்பான கேள்விக்கு ஏற்கெனவே பதில் அளித்திருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இருக்க வேண்டும் என்ற உணர்வு உலகில் இருக்கிறது. இந்த ஆதரவை என்னால் உணர முடிகிறது. உலகம் எதையும் எளிதாகவும் தாராளமாகவும் கொடுப்பதில்லை. சில நேரங்களில் நீங்கள் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, "ஐ.நா. நிறுவப்பட்டபோது, அன்றைய உலகம் இன்று இருப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அப்போது ஐ.நா.வில் 51 நிறுவன உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இன்று ஐ.நா.வில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை சுமார் 200 ஆக உள்ளது. இருந்தபோதிலும், ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர்கள் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE