மாலத்தீவு | மருத்துவ உதவிக்கு இந்திய விமானத்தை பயன்படுத்த அதிபர் அனுமதி மறுத்ததால் சிறுவன் பலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாலத்தீவில் மருத்துவ சிகிச்சைக்கான பயணத்துக்காக இந்தியா வழங்கிய டோனியர் விமானத்தை பயன்படுத்த அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்த நிலையில் அங்கு 14 வயது சிறுவன் ஒருவன் சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிழந்த சிறுவன் மூளைக் கட்டி மற்றும் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார். புதன்கிழமை இரவு சிறுவனுக்கு பக்கவாத பாதிப்பு தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் வசித்து வந்த தூரத்து தீவான வில்மிங்டனில் இருந்து சிகிச்சைக்காக தலைநகர் மாலேவுக்கு அவரைக் கொண்டு செல்ல குடும்பத்தினர் தீர்மானித்தனர். இதற்காக அவர்கள் சிறுவனை விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர் ஆனால் வியாழக்கிழமை காலை வரை அவர்களின் அழைப்புகளுக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தீவிரமான 16 மணி நேர போராட்டங்களுக்குப் பின்னர் மாலத்தீவு விமான போக்குவரத்து அதிகாரிகள் குடும்பத்தினரின் கோரிக்கைக்கு பதில் அளித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை உள்ளூர் ஊடகத்திடம் கூறுகையில், “பக்கவாத பாதிப்பு தீவிரமடைந்ததும் எனது மகனை உடனடியாக மாலேவுக்கு அழைத்துச் செல்வதற்காக நாங்கள் தீவின் விமான போக்குக்குவரத்து பிரிவுக்கு அழைத்தோம், ஆனால் அவர்கள் எங்களின் அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை. வியாழக்கிழமை காலை 8.30-க்குதான் எங்களின் அழைப்புக்கு பதில் அளித்தனர். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஏர் ஆம்புலன்ஸ் இருப்பதே தீர்வு” என்றார்.

ஒருவழியாக அச்சிறுவன் மாலேவுக்கு கொண்டு செல்லப்பட்டு, உனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாலும், சிறுவன் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனளிக்கவில்லை.

இதனிடையே இதுபோன்ற அவசர மருத்துவத் தேவைக்காக தீவுகளில் இருந்து வெளியேற்றுவதற்கு பொறுப்பு ஏற்றுள்ள ஆசந்தா கம்பெனி லிமிட்., இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஜன.18ம் தேதி ஜி.ஏ.விலிங்கிலியில் இருந்து அவசர மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்ற உதவி கோரி அழைப்பு வந்ததில் தொடர்புடைய சிறுவன் துரதிர்ஷ்டவமாக காலமானதை வருத்தத்துடன் ஒப்புக்கொள்கிறோம். ஆசந்தா கம்பெனியின் ஒட்டுமொத்த நிர்வாகம், ஊழியர்கள் அனைவரும் அந்தக் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். உதவிக்கான கோரிக்கையைப் பெற்றவுடன் நாங்கள் உடனடியாக சிறுவனை தீவிலிருந்து வெளியேற்றுவதற்கான செயல்முறைகளில் ஈடுபட்டோம். ஆனால் கடைசி நேர தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியேற்ற நடவடிக்கை தாமதமாகி விட்டது” என்று தெரிவித்துள்ளது.

சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வெளியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரித்துள்ளன. இதனிடையே, மாலத்தீவு எம்.பி., மீகைல் நசீம் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியா மீதான அதிபரின் கோபத்துக்காக மாலத்தீவு மக்கள் தங்களின் உயிரைக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், மாலத்தீவின் ஐக்கிய அரபு அமீரத்துக்கான முன்னாள் துணைத் தூதர் முகமது ஃபைசல், “ஒரு சில நாட்களுக்கு முன்பு, முகமது முய்சு இந்தியாவின் டோர்னியர் விமானத்தை அனுப்ப மறுத்ததால் ஒரு அட்டு குடும்பம் தங்களது மகனை இழந்தது. இன்று ஜிஏ விலிங்கிலியைச் சேர்ந்த ஒரு சிறுனின் உயிரை டோர்னியர் காப்பாற்றியிருக்க முடியும் என்ற நிலையில் உயிரிழந்துள்ளான். அதிபர் முய்சுவின் ஆணவத்துக்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட் (எச்ஏஎல்) தயாரித்த டோர்னியர் விமானம், இந்தியாவால் மாலத்தீவுக்கு வழக்கப்பட்டது. இவ்விமானங்கள் அவசரகால மனிதாபிமான உதவிகளுக்காக அங்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

உறவில் விரிசல்: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையில் தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 2023ம் ஆண்டு மாலத்தீவில் நடந்த தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். சீன ஆதரவாளரான அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. நவம்பர் மாதம் அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், இந்தியாவிடம் வலுவான கோரிக்கை வைக்க மக்கள் எனக்கு ஆணை பிறப்பித்துள்ளனர். மாலத்தீவு மக்களின் ஜனநாயக விருப்பத்துக்கு இந்தியா மதிப்பளிக்கும் என்று நம்புகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15க்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். புதிய அதிபரின் சீன நெருக்கம் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசலை உருவாக்கியுள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே ராஜாங்க ரீதியிலான உறவு மேலும் விரிசல் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE