பாகிஸ்தான் - ஈரான் மோதலும் பின்னணியும்: போர் மூளும் அபாயமா?

By நிவேதா தனிமொழி

ஈரான் - பாகிஸ்தான் இடையே நடந்த ஏவுகணைத் தாக்குதல்கள், மத்திய கிழக்கு நாடுகள் பகுதிக்குள் போர் மேகம் வலுக்கும் வாய்ப்பாக மாறும் அபாயம் உள்ளதாக கணிக்கப்படுகிறது. அதன் பின்னணி என்ன?

சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானுக்கும், ஷீயா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரானுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில் ஈரானின் சிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் அல்-தும் என்ற சன்னி தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ மூத்த தளபதி உட்பட 11 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில், கடந்த 16-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் பகுதியில் ஜெய்ஷ் அல்-தும் தீவிரவாதி முகாமை குறி வைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அடுத்து தன் நாட்டில் இருந்த ஈரான் தூதரையே வெளியேற்றியது பாகிஸ்தான். அதோடு பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் ஈரானின் தென்கிழக்கு பகுதிகளில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இது குறித்து பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள், ‘ஈரானின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 50 கி.மீ. தொலைவு வரை ஊடுருவியை எங்களது போர் விமானங்கள் பலுசிஸ்தான் தீவிரவாதிகளின் ஏழு முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டன’ என்றன.

முன்னதாக ,பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், ‘பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மூன்று சிறுமிகள் காயமடைந்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தீவிரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என பாகிஸ்தான் சொல்லி வருகிறது. அதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. இந்த மாதிரியான தாக்குதல்கள் அண்டை நாடுகளில் நம்பிக்கையைப் பாழாக்கும். தூதரக ரீதியாக பிரச்சினையை அணுக பல்வேறு வாய்ப்புகள் உள்ளபோது, ஈரான் தேர்ந்தெடுத்த வழி மிகவும் தவறானது’ எனக் குறிப்பிட்டிருந்தது.

‘பாகிஸ்தான் மண்ணில் ஈரானிய பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்தோம்; பாகிஸ்தானியர்கள் யாரும் குறிவைக்கப்படவில்லை’ என ஈரான் மறுப்புத் தெரிவித்தது.

இந்நிலையில், ஈரான் எல்லைக்குள் புரட்சிகர ஆயுதப் படைகள் முகாம்களை குறிவைத்துத் துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான். ஈரானின் சியஸ்டான் - பலுசிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் பதுங்கிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

போர் மேகம் சூழும் வேளையில் ஈரான் - பாகிஸ்தான் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளது சீனா. அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்க் கூறுகையில், ”பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஈரானும், பாகிஸ்தானும் அமைதி வழியில் கட்டுப்பாடுடன் நடக்கும் என்று சீனா நம்புகிறது. நிலைமையை சீராக்க நாங்க ஆக்கப்பூர்வமாக பங்காற்ற தயாராக இருக்கிறது. இரு தரப்பும் விரும்பினால் மத்தியஸ்தம் செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா தீவிரவாதத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளாது. இரண்டு நாட்டு பிரச்சனை என்றாலும் ஈரான் தற்காப்பிற்காக இந்தத் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை நாம் கொண்டுள்ளோம். ஈரான் முழுக்க முழுக்க தற்காப்புக்காக இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறது’ என சொல்லப்பட்டுள்ளது.

பிரச்னைக்கான காரணம் என்ன?

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம், ஈரான் சிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணம் என இரு நாடுகளின் மாகாணங்களும் கிட்டத்தட்ட 900 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

சிரியாவிலுள்ள பக்‌ஷத்-அல்-அசாத் என்ற அமைப்புக்கு ஈரான் ஆதரவு கொடுக்கிறது. இதற்கு எதிராக கடந்த 2012-ம் ஆண்டு பாகிஸ்தான் சலாவுதீன் ஃபருக்கீ என்பவர் ஜெய்ஸ்-அல்-தும் என்னும் அமைப்பைத் தொடங்கினார். இதுதான் ஈரான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

இப்படியான சூழலில், ஈரானில் சிறுபான்மையினராக இருக்கும் சன்னி முஸ்லிம்கள் அடக்குமுறை சந்திப்பதால், பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஸ்-அல்-தும் அமைப்பு இவர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது தாக்குதல்களை நடத்துகிறது. இந்த நிலையில்தான், ஈரானுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக ஈரான் குற்றம் சாட்டியது. அதனால், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பை ஈரான் கருப்புப் பட்டியலில் வைத்திருக்கிறது. இதுவே, இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவ காரணமாகவுள்ளது. இம்முறை அது கொஞ்சம் உச்சத்துக்குச் சென்று, ஏவுகணை தாக்குதல் வரை நீடித்திருக்கிறது.

ஏற்கெனவே, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் போர், லபனானில் கெஸ்புலா அமைப்புடன் இஸ்ரேல் மோதல், செங்கடலில் வணிகக் கப்பலைக் குறிவைத்து ஹவுத்திக்களின் தாக்குதல். ஹவுத்திக்களைக் குறிவைத்து ஏமனில் அமெரிக்க, பிரிட்டன் படைகளின் தாக்குதல், சிரியா - இராக் மோதல், என இதில் தற்போது பாகிஸ்தான் - ஈரான் மோதலும் இணைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், இஸ்ரேல் - பாலஸ்தீன் போரில் ஈரான் தலையிட்டு கொண்டு இருக்கிறது. ஹமாஸ் படைகளுக்கு ஆயுதங்களை அனுப்புகிறது ஈரான். இதனால், மத்திய கிழக்கு நாடுகள் இடையே போர் மூளுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கருத்துக்கள் சொல்லப்படுகிறது.

இதில் தலையிட்டு பேசியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தரெஸ், “ஈரானும் பாகிஸ்தானும் பதற்றங்கள் மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.

ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் "இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து பாதுகாப்பு பிரச்னைகள் அமைதியான வழிமுறைகள், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு மூலம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அண்டை நாடுகளின் உறவுகளின் கொள்கைகளுக்கு ஏற்ப தீர்க்கப்பட வேண்டும்” எனப் பேசியிருக்கிறது.

அணு ஆயுதங்கள் கொண்ட இரு நாடுகளிடையிலான இந்தச் சிக்கல் போராக மாறும் என்கிற நிலையில், சர்வதேச அமைப்புகள் இதில் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். உலகமயமாக்கலுக்குப் பின் இரு நாடுகளுக்கான போர் என்பது ஒட்டுமொத்த நாடுகளின் பிரச்சினையாகவும், அதனால் மக்கள் பாதிக்கப்படும் சூழலும் நிலவுகிறது. இதில் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் மனிதனேய செயல்பாட்டாளர்கள் கருத்தாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்