வாஷிங்டன்: செங்கடல் சர்வதேச வணிகப் பாதையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு காரணமாக இருப்பதாக ஏமனின் ஹவுதி படையை சர்வதேச பயங்கரவாத குழுவாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது. மேலும் ஹவுதிகளின் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்து வருகிறது.
ஏமன் உள்நாட்டுப் போரில் அந்நாட்டின் பெரும் பகுதியை கைப்பற்றிய ஹவுதிகள் ஹமாஸ்களுக்கு ஆதரவாக இஸ்ரேஸ் துறைமுகத்துக்கு செல்லும் அந்நாட்டுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, செங்கடல் பாதையில் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இவ்வாறு தாக்குதலுக்குள்ளான கப்பல்களில் பெரும்பாலானவை இஸ்ரேலுடன் தொடர்பு இல்லாதவை. இதனால் செங்கடல் வணிகப் பாதையில் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா ஏமனின் ஹவுதிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த பதிலடியின் மற்றொரு முன்னேற்றமாக ஏமனின் ஹவுதி பயங்கராவாதிகளை ‘சர்வதேச பயங்கரவாத குழு’ என்று அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது. மேலும் ஹவுதிகளின் இலக்குகள் மீதான தாக்குதல்களை தொடர்வதாக அறிவித்திருக்கிறது. இது சமீபமாக ஏமன் மீது நடத்தப்பட்ட நான்காவது நேரடித் தாக்குதலாகும்.
ஹவுதிகளை தீவிரவாதிகள் பட்டியலில் இணைப்பதால் அவர்களின் நிதி மற்றும் ஆயுத வளங்களை மட்டுப்படுத்தும் என்பது அமெரிக்காவின் கணக்கு. இதனை அமெரிக்காவின் அரசு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார். என்றாலும் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும், பயங்கரவாத குழு என்ற அறிவிப்பு தங்களின் நிலைப்பாட்டை மாற்றாது என்றும் ஹவுதிகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
» ஈரான் புரட்சிப் படைகள் முகாம்கள் மீது தாக்குதல்: உறுதிப்படுத்திய பாகிஸ்தான் உளவு அதிகாரி
» பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள சன்னி தீவிரவாத முகாம்கள் மீது ஈரான் தாக்குதல்
முன்னதாக கடந்த வாரத்தில், செங்கடல் பாதையில் செல்லும் சர்வதேச கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் அழைப்பு விடுத்தும் ஹவுதிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏமன் நாட்டின் ஹவுதிகள் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் தாக்குதல் நடத்தின. ஹவுதிகள் தொடர்புடைய 30 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “எங்களுடைய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் கப்பல்கள் செல்லும் வழித்தடத்தின் சுதந்திரத்தை கெடுக்கும் எந்தச் செயலையும் நாங்களோ எங்களது கூட்டாளிகளோ பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை இந்தத் தாக்குதல்கள் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.
ஹவுதிகள் நேரடியாக அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். செங்கடல் வணிகப் பாதையைப் பாதுகாக்க அமெரிக்கா தலைமையிலான ‘ஆபரேஷன் பிராஸ்பெரிட்டி கார்டியன்’-க்கு 20-க்கும் அதிகமான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. என்றாலும் தற்போதைய அமெரிக்க, பிரிட்டன் தாக்குதல் அந்த ஆபரேஷனுடன் தொடர்புடையது இல்லை. ஹவுதிகளின் பொறுப்பற்ற தாக்குதல்களுக்கு சர்வதேச சமூகத்தின் பதிலடி ஒற்றுமையானது உறுதியானது” என்று தெரிவித்திருந்தார்.
செங்கடல் வணிகப் பாதையை பாதுகாப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஹவுதிகள் மீது அமெரிக்கா 12 ஆம் தேதி மீண்டும் புதிய தாக்குதல் நடத்தியது. அப்போது ஹவுதிகளின் ராடார் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தப் பின்னணியில் அமெரிக்கா தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இது நான்காவது நேரடித்தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பா - ஆசியா இடையேயான கப்பல் போக்குவரத்தில் 15 சதவீதம் பங்கு வகிக்கும் முக்கிய கடல் வணிகப்பாதையான செங்கடல் பாதையில் இதுவரை 27-க்கும் அதிகமான கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago