அரசியலில் முதன்முறை: ஸ்பெயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் ‘டவுன் சிண்ட்ரோம்’ கொண்ட பெண்!

By செய்திப்பிரிவு

மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டு நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக டவுன் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கால்செரன் என்ற அந்தப் பெண்ணின் அரசியல் பிரவேசம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஏனெனில், கால்செரனின் இந்தப் பதவியேற்பு உலகம் முழுவதும் டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு கொண்டோர் மத்தியில் நேர்மறையான செய்தியைக் கடத்தியுள்ளதாகக் காணப்படுகிறது. அதுவும் டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு மிதமாக இருப்போருக்கு இது நம்பிக்கை செய்தியாக வந்துள்ளது. ஸ்பெயினில் மட்டுமல்ல, ஐரோப்பியாவிலேயே டவுன் சிண்ட்ரோம் பாதித்த பெண் ஒருவர் நாடாளுமன்ற பதவியில் அமர்வது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கால்செரன் அளித்த பேட்டியில், “எனது வெற்றி இதற்கு முன்னாள் அரசியல் காணாதது. டவுன் சிண்ட்ரோம் கொண்டவர்களால் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பதை பொதுச் சமூகம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது வரவேற்கத்தக்கது, இது ஒரு நீண்ட பாதையை வகுக்கும்” என்று கூறினார், கால்செரனுக்கு இப்போது 45 வயதாகிறது. இவர் தனது 18-வது வயதில் கட்சியில் இணைந்தார். நீண்ட காலத்துக்குப் பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் கவுன்சிலராக ஆஞ்சலா பாசிலர் என்பவர் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வரலாற்றப் பொறுத்தவரையில் 2019-ல் 27 வயதான பிரயான் ரஸ்ஸல் என்ற ட்ரோன் சிண்ட்ரோம் பாதித்த நபர் தேர்தலில் போட்டியிட்டார். தனது வெற்றி மூலம் தன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுதந்திரமான இயங்க முடியும் என்பதை பறைசாற்ற விரும்புவதாகக் கூறினார். அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் கவனம் ஈர்த்தார்.

டவுன் சிண்ட்ரோம் (மன நலிவு) என்றால் என்ன? - பொதுவாக நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் மரபுப் பண்புகளை உள்ளடக்கிய குரோமோசோம்கள் இருக்கும். வலைப்பின்னல் அமைப்பில் இருக்கும் இவை, ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கும். கரு உருவாதலின்போது தாய், தந்தையிடம் இருந்து பெறப்படும் 23 குரோமோசோம்கள் இணைந்து, புதிதாக 23 ஜோடி குரோமோசோம் அமைப்பு உருவாகும்.

இந்தக் குரோமோசோம் இணைவின்போது தாய் அல்லது தந்தையிடம் இருந்து பெறப்படும் 21-வது குரோமோசோமுடன் அதன் நகலும் கூடுதலாகச் சேர்ந்துவிடும். இதனால் 46 குரோமோசோம்களுக்கு பதிலாக, ஒவ்வொரு செல்லிலும் 47 குரோமோசோம்கள் இருக்கும். குரோமோசோம்களின் இந்தப் பிறழ்வுதான் டவுன் சிண்ட்ரோம். இந்தக் குறைபாடு உடைய குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியில் மந்தத் தன்மை இருக்கும் என்பதால் தமிழில் இது ‘மன நலிவு’ எனப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE