மன்னர் வம்சாவளி அல்லாத சாமானிய பெண்ணை கரம் பிடித்தார் புருனே இளவரசர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "ஹாட் ராயல்" என்று அழைக்கப்படும் புருனேயின் இளவரசர் அப்துல் மதீன் இப்னி ஹசனல் போல்கியா (Abdul Mateen ibni Hassanal Bolkiah), தனது காதலியான யாங் முலியா அனிஷா ரோஸ்னாவை (Yang Mulia Anisha Rosnah) திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புருனே நாடு எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டின் மன்னராக இருப்பவர் சுல்தான் ஹசனல் போல்கியா. இவரின் 10-வது மகனும், இளவரசருமான அப்துல் மதீன், அரச குடும்பத்தைச் சாராத தனது காதலியான யாங் முலியா அனிஷா ரோஸ்னாவை (ஜன.11) திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம், தலைநகர் பந்தர் செரி பெகவானில் உள்ள தங்க குவிமாடம் கொண்ட மசூதியில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமண விழா ஜனவரி 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 16 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறது. இதற்காக திருமண நிகழ்ச்சிகள் 1,788 அறைகள் கொண்ட அரண்மனையில் நடைபெற்றது.

உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரும், ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய செல்வந்தருமான சுல்தான் ஹசனல் போல்கியாவின் 10-வது மகன் தான் அப்துல் மதின். புருனேயின் இளவரசர் அப்துல் மதின் அந்நாட்டின் விமானப் படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. அனிஷா பேஷன் துறையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். ஊடகங்களில் பிரிட்டனின் இளவரசர் ஹாரியுடன் ஒப்பிடப்படும் மதின், ‘ஹாட் ராயல்’ என அன்போடு அழைக்கப்படுகிறார். நாளை (ஜனவரி 14 ஆம் தேதி), அரச குடும்ப வாகனத்தில் புதுமணத் தம்பதி வீதியில் வலம் வருவார்கள். அப்போது இந்த தம்பதிக்கு அனைவரும் வாழ்த்து கூறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மிக பிரமாண்டமாக நடக்கவுள்ள திருமண ஊர்வலத்தையும், மணமக்களையும் நேரில் காண அந்நாட்டு மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE