சவுதி அரேபியாவில் ஹஜ், உம்ரா மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, முரளீதரன் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

ஜெட்டா: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஹஜ் மற்றும் உம்ரா மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் முரளீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜெட்டாவில் சவுதி அரேபிய அரசு ஏற்பாடு செய்துள்ள ஹஜ் மற்றும் உம்ரா, மாநாடு மற்றும் கண்காட்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சவுதி அரசின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இரு அமைச்சர்களின் தலைமையில் தூதுக்குழு இதில் கலந்துகொண்டது. கடந்த 7-ம் தேதி இந்தியாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே ஹஜ் 2024-க்கான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஹஜ் மற்றும் உம்ரா மாநாடு மற்றும் கண்காட்சி என்பது ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ஒரு சர்வதேச நிகழ்வாகும். இந்த சர்வதேச மாநாட்டின் 3-வதுபதிப்பு மற்றும் கண்காட்சி 2024 ஜனவரி 08 முதல் 11 வரை ஜெட்டாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய மாநாட்டில் முக்கிய முடிவு எடுப்பவர்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அமர்வுகள், பட்டறைகள், பயிற்சிக் கருத்தரங்குகள் ஆகியவை இடம்பெறும்.

ஹஜ் மற்றும் உம்ரா துறையில் ஈடுபட்டுள்ள தனியார் மற்றும் பொது நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன், உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

மகளிர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தலைமையிலான பிரதிநிதிகள் மாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்து கொண்டனர். இது உலக அளவில் சிறந்த நடைமுறைகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. மேலும் இந்திய யாத்ரீகர்களுக்கு ஹஜ் அனுபவத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் யோசனைகள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவியது.

இந்த மாநாட்டுக்கு இடையே, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் மக்கா பிராந்திய துணை ஆளுநர் இளவரசர் சவுத் பின் மிஷால் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்பிக் பின் பவ்ஸான் அல் ரபியா கலந்து கொண்டார். ஹஜ் 2024-ன் போது இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த முயற்சிக்கும் சவுதி அரேபியாவுடன் மேலும் நெருக்கமான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE