லட்சத்தீவு கடற்கரைக்கு சென்று வந்த பிறகு பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம்: மாலத்தீவின் 3 அமைச்சர்கள் நீக்கம்

By செய்திப்பிரிவு

மாலே: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த மாலத்தீவின் 3 அமைச்சர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

அதோடு அவர் வெளியிட்ட பதிவுகளில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவெட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி. சாகச சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம். நான் ஸ்நோர்கெலிங் பொழுதுபோக்கில் ஈடுபட்டேன். கவச உடையில் நீருக்கடியில் மூழ்கியது புதிய அனுபவமாக இருந்தது" என்று தெரிவித்தார்.

கூகுளில் முதலிடம்: பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வைரலாக பரவின. பிரதமரின் பயணம் காரணமாக கடந்த 2 நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது.

மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறு: பிரதமர் மோடியின் பயணம் குறித்து மாலத்தீவு நாட்டின் இளைஞர் நலத் துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார்.மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

மாலத்தீவின் இளைஞர் நலன், தகவல், கலை துறை இணை அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளை பதிவு செய்தார். பிரதமர் மோடியை மோசமாகவும் இஸ்ரேலின் ஊதுகுழல் என்றும் அநாகரிகமாக அவர் விமர்சனம் செய்தார். மாலத்தீவு இளைஞர் நலத் துறை இணையமைச்சர் மால்ஷா ஷெரீப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மோடி முர்தாபாத்' என்று மோசமாக விமர்சித்து இருந்தார்.

மாலத்தீவின் ஆளுங்கட்சி மூத்த தலைவர் ஜாகித் ரமீஸ், இந்தியர்களை கேலி செய்யும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்துகளை தெரிவித்தார். “சுற்றுலா துறையில் எங்களுடன் இந்தியா போட்டி போடுவது ஒரு மாயை. நாங்கள் வழங்கும் சேவையைப் போன்று இந்தியாவால் வழங்க முடியுமா? இந்தியர்களால் சுத்தத்தை பேண முடியுமா? இந்திய சுற்றுலா நகர அறைகளின் தூர்நாற்றம் ஒன்றே, சுற்றுலா துறையை படுபாதாளத்துக்கு தள்ளிவிடும்" என்று ஜாகித் ரமீஸ் விமர்சித்தார்.

மாலத்தீவு அரசு விளக்கம்: மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப், ஆளும் கட்சி மூத்த தலைவர் ஜாகித் ரமீஸ் ஆகியோரின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு இந்தியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாலத்தீவு அரசு சார்பில் நேற்று விரிவான விளக்கம் வெளியிடப்பட்டது. அதில், "அமைச்சர்களின் கருத்துகளுக்கும் மாலத்தீவு அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அவை அவர்களின் தனிப்பட்ட கருத்து. வெளிநாட்டு தலைவர்களை அவதூறாக விமர்சிப்பதை மாலத்தீவு அரசு ஏற்காது. சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்போர் மீது அரசு தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

அதிபர் நடவடிக்கை: இதைத் தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நேற்று 3 அமைச்சர்களையும் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாலத்தீவு அதிபர் வட்டாரங்கள் கூறும்போது, “அமைச்சர்கள் மரியம் ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாக கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக 3 அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாலத்தீவில் கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் அதை ஜனநாயகத்துக்கு விரோதமாக பயன்படுத்தக் கூடாது. வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு கருத்துகளை வெளியிடுவோர் மீது தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தன.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய போராக வெடித்துள்ளது. மாலத்தீவை புறக்கணித்துவிட்டு இந்திய சுற்றுலா தலங்களுக்கு செல்லுங்கள் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக பிரபல நடிகர்கள் உள்ளிட்டோர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்