“இந்தியா நம்பகமான நட்பு நாடு; எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது” - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேச்சு

By செய்திப்பிரிவு

டாக்கா: "இந்தியா ஒரு நம்பகமான நட்பு நாடு, 1971-ம் ஆண்டு விடுதலைப் போரின்போது எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது" என்று வங்கதேச பிரதமர் ஷேத் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தேர்தல் நாளில் இந்தியாவுக்கு அவர் அனுப்பிய செய்தி குறித்து அவரிடம் கேட்டபோது, “நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்தியா எங்களின் நம்பகமான நட்பு நாடு. எங்களின் விடுதலைப் போரின் போது எங்களுக்கு ஆதரவளித்தது. 1975-க்கு பின்னர் நாங்கள் எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்தோம். அவர்கள் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். இந்திய மக்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.

இந்தியாவும் வங்கதேசமும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் நெருங்கிய பன்முக உறவுகளை பகிர்ந்து கொள்கின்றன. சமீப காலமாக அவை மிகவும் வலுபெற்றுள்ளன. ஹசீனாவும் பிரதமர் மோடியும் வர்த்தக தாராளமயமாக்கல், எல்லை மேலாண்மை உள்ளிட்ட இருதரப்பு பிரச்சினைகள் குறித்த வளரும் உறவுகள் குறித்து அடிக்கடி தனிப்பட்ட பேச்சு வார்த்தைகள் நடத்துவதுண்டு.

வங்கதேசத்தின் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா, அந்நாட்டின் பிரதமராக நான்காவது முறையாக பதவி ஏற்க உள்ளார். இது ஒட்டுமொத்தமாக அவரது கட்சிக்கு 5 வது வெற்றியாகும். வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பொதுத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) பொதுவேலை நிறுத்தத்தின் வாயிலாக புறக்கணித்துள்ளது.

பிஎன்பி கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து அக்கட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக நாட்டில் பல வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு வாக்குச்சாவடிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

ஒரு காலத்தில் ஏழ்மையில் உழன்று வந்த ஒரு நாட்டின் விதிவிலக்கான பொருளாதார வளர்ச்சிக்காக ஹசீனாவை நிபுணர்கள் பாராட்டுகின்றனர். ஆனால், அவரது கட்சி, மனித உரிமை மீறல் மற்றும் எதிர்க்கட்சிகளின் மீதான ஒடுக்குமுறையை ஏவுவதாக குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE