‘உனக்காக மடிவேன். ஆனால்...’- யுத்தப் பாடலுடன் நியூசி. நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட ஹானாவின் பின்புலம்

By செய்திப்பிரிவு

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையின்போது பழங்குடியின போர் பாடல் பாடி அதிரவைத்து தனது இனத்தினர் பற்றி உணர்ச்சிகரமாக பேசிய இளம் பெண் எம்.பி. ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதன் பின்புலத்தைப் பார்ப்போம்.

நியூசிலாந்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 54-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேசிய கட்சியினர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். இதனிடையே, அங்குள்ள டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த 6 பேர் எம்.பி.களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க் ஒருவர். 21 வயதேயான இவர் கடந்த 1853-லிருந்து நியூசிலாந்து வரலாற்றில் மிக இளம் வயதில் எம்.பி. ஆனவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் அந்நாட்டில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய முதல் உரைதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“எனது இந்த முதல் உரையை எனது தாத்தா, பாட்டிகளுக்கு அர்ப்பணித்திருந்தேன். என்றாலும் இன்று இந்தப் பேச்சு எங்கள் சமூகத்தின் அனைத்து குழந்தைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது" என்று தனது பேச்சினைத் தொடங்கிய ஹானா, "உனக்காக நான் மடிவேன்... ஆனாலும் உனக்காக நான் வாழவும் செய்வேன்!" என்று தனது பேச்சினுடே மவோரி இனத்தின் போர் பாடலைப் பாடி நாடாளுமன்றத்தை அதிர வைத்தார். இவர் உணர்ச்சிப் பொங்க ஆவேசமாகப் இந்தப் பேச்சு தற்போது நெட்டிசன்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

யார் இந்த ஹானா மைபி? - நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கும் ஹாமில்டனுக்கும் இடையில் உள்ள சிறிய நகரமான ஹன்ட்லியைச் சேர்ந்தவர் ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க். 21 வயதேயான இந்த இளம் பெண்ணுக்கு அரசியல் ஒன்றும் புதில்லை. மவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இவரது குடும்பம் மூன்று தலைமுறைகளாக அரசியலில் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இவரது தாத்தா டைதிமு மைபி, ஹாமில்டன்களின் காலனியாதிக்க மரபு மற்றும் மவோரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்களுக்கு எதிராக போராடும் விதமாக ஹாமில்டன் நகரின் பெயருக்கு சொந்தக்காரரான கேப்டன் ஹமில்டனின் சிலையை உடைத்து தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

1996 முதல் எம்.பி.யாக இருந்தவரும், கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஹவுராகி வைகடோ தொகுதியில் வெற்றி பெற்று வந்தவருமான மூத்த அரசியல்வாதியான நனையா மஹுதவை ஹானா தோற்கடித்து முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளார்.

தொழில்முறையாக மவோரி கம்யூனிட்டி கார்டன் நடத்தி வரும் ஹானா, அரசியல் மற்றும் சமூக போராட்டாங்களைத் தவிர, பள்ளிக் குழந்தைகளுக்கு மவோரி கார்டனிங் குறித்து கற்பித்து வருகிறார். மேலும், நியூசிலாந்தின் பூர்வகுடி மக்களின் உரிமைகளுக்காக போராடியும் வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE